கைவிலங்கிடப்பட்ட நிலையிலும்... பசிபிக் தீவொன்றில் சிக்கியுள்ள இலங்கைப் பெண்மணி
Sri lankan stuck on a tiny Pacific island for years: பல வருடங்களாக பசிபிக் பெருங்கடலில் உள்ள ஒரு சிறிய தீவில் சிக்கிக்கொண்ட இலங்கை நபர்.
பணி விசாவிற்கு விண்ணப்பிக்க நியூசிலாந்தை விட்டு வெளியேறிய ருசிரா ரணசிங்க, அந்த விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டு, தற்போது போக்குவரத்து விசாவும் மறுக்கப்பட்ட நிலையில் தீவொன்றில் சிக்கிக்கொண்டுள்ளார்.
கைகள் கட்டப்பட்டு
சுமார் ஒரு தசாப்தத்திற்கு முன்பு ருசிரா ரணசிங்க இலங்கையை விட்டு வெளியேறியபோது, தான் தெற்கு பசிபிக் பெருங்கடலில் உள்ள ஒரு சிறிய தீவுக்கூட்டத்தில் சிக்கிக்கொள்வோம் என்று அவர் ஒருபோதும் கற்பனை செய்திருக்க மாட்டார்.

50 வயதான அவர், தற்போது மூன்று ஆண்டுகளாக குக் தீவுகளில் சிக்கியிருக்கிறார். இலங்கைக்குத் திரும்ப வேண்டும் என்று அவர் போராடி வருவதுடன்; அதற்காக, கைவிலங்கிடப்பட்டு, கைகள் கட்டப்பட்டு, வாய் அடைக்கப்பட்ட நிலையில் செல்லவும் தயார் என தெரிவித்துள்ளார்.
நியூசிலாந்தில் இனி குடியேறலாம் என்றே ரணசிங்க நம்பியிருந்தார். அங்கு தஞ்சம் கோரிய பிறகு, பணி விசாவுக்கு விண்ணப்பிப்பதற்காக தற்காலிகமாக நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்ற குடிவரவு ஆலோசகரின் பரிந்துரையைப் பின்பற்றியதாக அவர் கூறுகிறார்.
ஆனால் குக் தீவுகளுக்குச் சென்றடைந்ததும், அவரது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது. மேலும், நியூசிலாந்தை விட்டு வெளியேறியதன் மூலம், அவர் தனது புகலிடம் தொடர்பான விசா நிபந்தனைகளை மீறியிருந்தார்.
தற்போது நியூசிலாந்து அவருக்கு இடைத்தங்கல் விசாவை (transit visa) வழங்க மறுத்து வருகிறது; இந்த விசா கிடைத்திருந்தால் அவரால் விமானம் மூலம் தனது சொந்த நாடான இலங்கைக்குச் சென்றிருக்க முடியும்.
இதனிடையே, அவுஸ்திரேலியாவும் அவருக்கு அனுமதி மறுக்கிறது. குக் தீவுகளிலிருந்து அவர் விமானத்தில் செல்லக்கூடிய மற்ற சர்வதேச இடங்களான தஹிதி மற்றும் ஹவாய் ஆகிய இடங்களில், விசா செயலாக்கப்படுவதற்கு முன்பு அவர் நியூசிலாந்தில் பயோமெட்ரிக் தகவல்களை வழங்க வேண்டும்.
இதன் விளைவாக, அவர் குக் தீவுகளிலிருந்து வெளியேறுவதற்குச் சாத்தியமான வழி எதுவுமில்லை என்ற நிலை உருவாகியுள்ளது. தனது ஒரே ஒரு மகனின் திருமணம் நவம்பரில் நடக்கவிருக்கிறது. அவரது திருமணத்தின்போது நான் அங்கு இருக்க வேண்டும் என்று மிகவும் விரும்புகிறேன்.
எனக்கு நேர்ந்த நெருக்கடியைக் கண்டு என் தாயார் மிகுந்த கவலையடைந்துள்ளார்; அதனால் அவர் அடிக்கடி மருத்துவமனைக்குச் சென்று வரும் சூழலில் இருக்கிறார் என்று ரணசிங்க கண்ணீருடன் கூறுகிறார்.
வியாபார நஷ்டம் காரணமாகத் தனது சிறிய டி-ஷர்ட் தொழிற்சாலையை மூட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதை அடுத்து, ரணசிங்க 2018-ல் இலங்கையை விட்டு வெளியேறினார். கடன்களைத் திருப்பிச் செலுத்த சிரமப்பட்ட அவர், முதியவர்களையும் குழந்தைகளையும் கவனித்துக்கொள்ளும் வீட்டுப் பணிப்பெண்ணாகப் பணியாற்றுவதற்காக ஹொங்ஹொங்கிற்குக் குடிபெயர்ந்தார்.
குடிவரவு ஆலோசகரின் பரிந்துரை
அவர் கடுமையான நிதி நெருக்கடிக்கு ஆளாகியிருந்ததாக அவருடைய சகோதரர் பிபிசி சிங்களத்திடம் தெரிவித்தார். அவருடைய கணவர் போதைக்கு அடிமையானவர் என்றும், அவர் சுமார் ஏழு ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார் எனவும் தெரிவித்துள்ளார்.
2022 டிசம்பரில், ரணசிங்க நியூசிலாந்துக்குச் சென்றார். அங்கு இரண்டு மாத கால வருகை விசாவில் தனது உறவினர் ஒருவருடன் தங்கியிருந்ததாக அவர் கூறுகிறார். அதன் காலாவதி நெருங்கும் வேளையில், இலங்கையில் கடன் வழங்குநர்களிடமிருந்து தனக்கு அச்சுறுத்தல்கள் இருப்பதாகக் கூறி, தஞ்சம் கோருவதற்கு ஒரு குடிவரவு மொழிபெயர்ப்பாளர் தனக்கு உதவியதாக அவர் கூறுகிறார்.

அவருக்கு அடைக்கலம் கோருபவருக்கான open work visa வழங்கப்பட்டது; இது ஓராண்டு காலத்திற்கு எந்தவொரு நிறுவனத்திலும் பணிபுரிய அவருக்கு அனுமதி அளித்தது. அவர் ஒரு உணவகத்தில் வேலைக்குச் சேர்ந்தார். அந்த உணவகம் அவருக்கு வேலை சார்ந்த விசா (employment visa) பெற்றுத் தர முன்வந்தது; இது தனக்கு நீண்டகால அடிப்படையில் நிலைத்தன்மையை வழங்கும் என்று அவர் நம்பினார்.
ஆனால், நியூசிலாந்தில் தஞ்சம் கோருபவர்களின் விண்ணப்பங்கள் பரிசீலனையில் இருக்கும்போது, அவர்கள் பொதுவாக வேறு விசாக்களுக்கு விண்ணப்பிக்க முடியாது என்பதால், அது நிராகரிக்கப்பட்டது. இந்த நிலையிலேயே, பணி விசாவுக்கு விண்ணப்பிப்பதற்காக தற்காலிகமாக நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்ற குடிவரவு ஆலோசகரின் பரிந்துரையைப் பின்பற்றியதாக அவர் கூறுகிறார்.
அது ஒரு பெருந்துயரம் தரும் முடிவாக அமைந்துள்ளது. அவருக்கு மீண்டும் வேலைவாய்ப்பு விசா மறுக்கப்பட்டது. மேலும், நியூசிலாந்தை விட்டு வெளியேறியதன் மூலம், அவர் தனது தற்போதைய விசாவின் விதிமுறைகளை மீறியிருந்தார். அவருக்கு எதிர்காலத்தில் எந்த விசாவும் வழங்கப்படாது என்பதை நியூசிலாந்து அதிகாரிகள் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளனர்.

நியூசிலாந்தால் இடைத்தங்கல் விசாவிற்கான (transit visa) மூன்று விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டன. அவர் நியூசிலாந்தை விட்டு வெளியேறுவார் என்பதில் தங்களுக்கு நம்பிக்கை இல்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
அவுஸ்திரேலிய இடைத்தங்கல் விசாவிற்கான நான்கு விண்ணப்பங்களும் நிராகரிக்கப்பட்டன. நியூசிலாந்திற்கு அவர் சமர்ப்பித்த சமீபத்திய விண்ணப்பமும் நிராகரிக்கப்பட்டது; அந்த விண்ணப்பத்தில், அவர் மேற்கொண்ட மாற்று முயற்சிகள் குறித்த விவரங்கள், அவரது மகனின் வரவிருக்கும் திருமணம் மற்றும் உடல்நலம் குன்றி வரும் அவரது தாயாரின் நிலை என அனைத்துத் தகவல்களும் இடம்பெற்றிருந்தன.
அவர் தற்போது தங்கியிருக்கும் ஹொட்டல், பணியாளர்களுக்கான தங்குமிடத்தில் அவருக்குக் கட்டணமின்றி இருக்க இடமளித்துள்ளது; அதேபோல், உள்ளூர் மக்கள் அவருக்கு உணவு மற்றும் உடைகளை வழங்கி உதவுகின்றனர் என்று அவர் கூறுகிறார்.
இந்த நிலையில், நியூசிலாந்தின் வெலிங்டனில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலய அதிகாரிகள் மற்றும் நியூசிலாந்தின் சம்பந்தப்பட்ட அதிகாரிகள், இந்த விவகாரம் தொடர்பாக வெளிவிவகார அலுவல்கள் அமைச்சருடன் இணைந்து நெருக்கமாகச் செயற்பட்டு வருவதாகவே தகவல் வெளியாகியுள்ளது.