அமெரிக்காவில் தோசையால் புகழ்பெற்ற இலங்கை தமிழர்! கனடா, ஜப்பானிலும் ரசிகர்கள்..யார் அவர்?
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் தோசை மனிதர் என்று புகழ்பெற்ற இலங்கைத் தமிழர் குறித்து இங்கே காண்போம்.
இலங்கைத் தமிழர்
உலகின் விலைவாசி உயர்வான நகரங்களில் ஒன்றான அமெரிக்காவின் நியூயார்க்கில், இலங்கையைச் சேர்ந்த தமிழர் ஒருவர் தனது தோசை உணவால் ஏராளமானோரை அடிமையாக்கி வைத்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் நீச்சல் பயிற்சியாளராக இருந்த திருக்குமார் கந்தசாமி என்பவர்தான் தற்போது 'தோசை மனிதன்' என அடையாளப்படுத்தப்பட்டுள்ளார்.
இதற்கு காரணம் இந்தியர்கள் மட்டுமின்றி அமெரிக்கர்களையும் கவரும் அவரது தெருவோர தோசை கடைதான்.
இவர் வாஷிங்டன் ஸ்கொயர் பார்க் தெருக்களில் தனது தள்ளுவண்டி கடை மூலம் தோசை விற்பனை செய்கிறார்.
சீஸ் மசாலா தோசை
திருக்குமார் கந்தசாமி 21ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் பல்வேறு கனவுகளுடன் நியூயார்க் நகருக்கு குடிபெயந்தார். ரஜினி என்ற பெண்ணை காதல் திருமணம் செய்துகொண்ட திருக்குமாருக்கு சஜினி என்ற மகள் உள்ளார்.
நியூயார்க் நகருக்கு வந்த புதிதில் பல்வேறு பணிகளை செய்த பின்னர்தான், தனது தாய் மற்றும் பாட்டியிடம் கற்றுக்கொண்ட சீஸ் மசாலா தோசையை தனது அடையாளமாக மாற்றினார். இது காரம் நிறைந்த தோசை ஆகும்.
திரு மசாலா தோசைகளுடன் காரம் நிறைந்த தேங்காய் சட்னி மற்றும் 11 வெவ்வேறு காய்கறிகளுடன் கூடிய பருப்பு சூப் போன்றவற்றையும் வழங்குகிறார்.
அத்துடன் சமோசா தோசை என்ற புதிய உணவையும் திரு விற்பனை செய்கிறார். இந்த தோசை வட இந்திய மற்றும் தென் இந்திய சுவைகளின் கலவையாக இருப்பதாக வாடிக்கையாளர்கள் கூறுகின்றனர்.
கனடா, ஜப்பானில் ரசிகர்கள்
இந்த தோசைக்காக அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் மட்டுமில்லாமல் கனடா, ஜப்பானில் கூட ரசிகர்கள் இருக்கிறார்களாம்.
தனது இன்ஸ்டகிராம் வீடியோவில் அனைவரும் திரு என்று அன்புடன் அழைப்பதை திருக்குமார் பதிவிட்டுள்ளார்.
அவர் தன் தோசை வண்டியின் சுவர்களில், உலகெங்கிலும் இருந்து தனக்கு கிடைத்த பாராட்டுக்கள் கொண்ட செய்தித்தாள் வெட்டுக்கள் மற்றும் சான்றிதழ்களை நிரப்பியுள்ளார்.
சமையலறைகளில் இல்லாத ஒரு மந்திரம்
தோசை மனிதன், NYDOSAS உள்ளிட்ட பக்கங்கள் திருக்குமாரை சமூக வலைத்தளங்களில் அறிய உதவுகின்றன.
இவரது வாடிக்கையாளர்கள் பலர், வீட்டில் தோசை செய்து சாப்பிட்டாலும் திருவின் கடையில் தோசையை சாப்பிடாமல் ஒருநாளையும் கடக்க முடியவில்லை என்றும், நியூயார்க்கின் பல்துறை சமையலறைகளில் இல்லாத ஒரு மந்திரம் என்றும் பாராட்டுகின்றனர்.
இத்தனை வரவேற்பையும், அன்பையும் பெற்றிருந்தாலும் ஒரு நிலையான உணவகத்தைத் திறக்கும் எண்ணம் இல்லை என்கிறார் திருக்குமார்.
அதற்கு காரணம், முதலீட்டாளர்களின் நலன்களுக்கு தனது சுதந்திரத்தையும், யோசனைகளையும் இழக்க நேரிடும் என அச்சம்கொள்வதாக அவர் கூறுகிறார்.
யாழ்ப்பாணத்திலிருந்து நியூயார்க் சென்றவர் இன்று அந்நகரில் தனக்கென ஒரு பெரிய வட்டாரத்தை உருவாக்கியிருக்கிறார் இந்த திருக்குமார் எனும் இலங்கைத் தமிழர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |