இலங்கை தலைநகர் கொழும்பிலிருந்து தப்பியோடும் மக்கள்!
இலங்கையில் ஊரடங்கு தளர்த்தப்பட்டுள்ள நிலையில் மக்கள் கூட்டம் கூட்டமாக தலைநகர் கொழும்பை விட்டு வெளியேறி வருகின்றனர்.
திங்கட்கிழமை கொழும்பு காலி முகத்திடலில் அமைதியாக போராடி வந்தவர்களை அரசாங்க ஆதரவாளர்கள் தாக்கியதை அடுத்து நாடு முழுவமு் கலவரம் வெடித்தது.
இதனையடுத்து, கலவரத்தை கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டது. இலங்கையில் வெடித்த வன்முறையில் 9 பேர் கொல்லப்பட்டதாகவும், 300 பேர் காயமடைந்ததாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
அதேசமயம், நேற்று தலைநகர் கொழும்பில் ஆயுதமேந்திய ராணுவ வாகனங்கள் குவிக்கப்பட்டது.
இந்நிலையில், அதிகாரிகள் இன்று காலை 7 மணிக்கு ஊரடங்கை தளர்த்தியதை தொடர்ந்து, சொந்த ஊர் திரும்ப நூற்றுக்கணக்கான மக்கள் கொழும்பில் உள்ள பிரதான பேருந்து நிலையத்தில் குவிந்துள்ளனர்.
மேலும், சொந்த ஊர் திரும்ப கொழும்பிலிருந்து புறப்படும் பேருந்துகளில் மக்கள் கூட்டம் நிரம்பியுள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அதேசமயம், காலை 7 மணிக்கு தளர்த்தப்பட்ட ஊரடங்கு, மதியம் 2 மணிக்கு, அதாவது வெறும் 7 மணிநேரத்திற்கு பிறகு மீண்டும் அமுல்படுத்தப்படும் என அதிகாரிகள் அறிவித்துள்ளதால், கொழும்பை விட்டு மக்கள் கூட்டம் கூட்டமாக வெளியேறி வருவதற்கு முக்கிய காரணம் என கூறப்படுகிறது.
இலங்கையின் புதிய பிரதமரை இன்று அறிவிக்கிறார் அதிபர் கோட்டாபய! கசிந்த முக்கிய தகவல்
இதனிடையே, இலங்கை பொருளாதார நெருக்கடியிலிருந்து மீட்கும் முயற்சியாக, அதிபார் கோட்டாபய ராஜபக்ச இன்று புதிய பிரதமரை நியமிப்பார் என தகவல்கள் வெளியாகியுள்ளது.