2026 புத்தாண்டு முதல் இலங்கையில் அமுலுக்கு வரும் புதிய வரி: அதிரடி மாற்றங்கள் என்னென்ன?
2026 புத்தாண்டு முதல் இலங்கையில் புதிய வரி நடைமுறைகள் அமுலுக்கு வந்துள்ளது.
புதிய வரி விதிமுறைகள்
2026 புத்தாண்டு முதல் இலங்கையில் சூதாட்ட விடுதிகள் (Casino) மற்றும் பந்தய வியாபாரங்களுக்கான அதிரடி மாற்றங்கள் இடம்பெறவுள்ளன.
(ஜனவரி 01ம் திகதி முதல் புதிய வரி விதிமுறைகள் நடைமுறைக்கு வரும் வகையில், இந்த மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக உள்நாட்டு இறைவரித் திணைக்களம் (IRD) அறிவித்துள்ளது.

2025ஆம் ஆண்டின் 25 ஆம் இலக்க பந்தயம் மற்றும் சூதாட்ட வரி (திருத்தச்) சட்டத்தின் ஊடாக மேற்கொள்ளப்பட்ட மாற்றங்களுக்கு அமைவாக இந்நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது.
அதிகரிக்கும் கட்டணங்கள்
அதன்படி, சூதாட்ட விடுதிகளுக்குள் நுழைவதற்கான நுழைவுக் கட்டணம் இதுவரை 50 அமெரிக்க டொலர்களாக காணப்பட்ட நிலையில், தற்போது 100 அமெரிக்க டொலர்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
மேலும், இலங்கைப் பிரஜைகள் எவரேனும் சூதாட்ட விடுதிக்குள் நுழையும் போது, குறித்த நிறுவனத்தினர் தலா 100 டொலர் அல்லது அதற்கு சமமான வெளிநாட்டு நாணயம் அல்லது இலங்கை ரூபாயை நுழைவுக் கட்டணமாக அறவிட வேண்டும்.

பந்தயம் மற்றும் சூதாட்ட வியாபாரங்களில் ஈடுபடும் நிறுவனங்கள் செலுத்தி வந்த 15 சதவீத வரி, தற்போது 18 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
மேலும், மாதாந்தம் ஒரு மில்லியன் ரூபாய்க்கும் அதிகமான மொத்த வருமானத்தை ஈட்டும் பந்தய முகவர்கள் மற்றும் சூதாட்ட நிறுவனங்களுக்கு இந்த புதிய 18 சதவீத வரி வீதம் பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய வரி முறைமைக்கு அமைவாக செயற்படுமாறு அனைத்து சூதாட்ட விடுதி உரிமையாளர்களுக்கும், பந்தய வியாபார நிறுவனங்களுக்கும் உள்நாட்டு இறைவரித் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |