இலங்கையில் வெடித்துள்ள போராட்டம்: 5 முக்கிய தகவல்கள்
இலங்கை சுதந்திரத்திற்குப் பின்னர் மிக மோசமான வீழ்ச்சியை சந்தித்து வருகிறது. இது மிகவும் அத்தியாவசியமான இறக்குமதிகளுக்கு கூட செலுத்துவதற்கு வெளிநாட்டு நாணயத்தின் கடுமையான பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
அந்நியச் செலாவணி பற்றாக்குறையின் காரணமாக இலங்கை அரசால் எரிபொருள் ஏற்றுமதிக்கு பணம் செலுத்த முடியவில்லை, மேலும் சர்வதேச நாணய நிதியத்தின் உதவியைப் பெற தயாராக உள்ளது.
இலங்கையின் பொருளாதார நெருக்கடியின் ஐந்து முக்கிய தகவல்கள்:
ஜனாதிபதி மாளிகைக்கு வெளியே போராட்டம்
இலங்கையின் தலைநகர் கொழும்பில் 5,000-க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்ட பேரணியை நடத்தியதோடு, இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் வீட்டுக்கு வெளியே பொலிஸாருடன் மோதலில் ஈடுபட்டனர்.
ஜனாதிபதியின் இல்லத்தை முற்றுகையிட முயன்ற போராட்டக்காரர்கள் மீது பொலிஸார் கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகம் செய்தனர். அதிபர் ராஜபக்சே பதவி விலக வேண்டும் என போராட்டக்காரர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
"வீட்டிற்கு போ கோட்டா"
ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்ட ஆண்களும் பெண்களும் "வீட்டிற்கு போ கோட்டா" என்று பதாகைகள் ஏந்தி கோஷமிட்டு வருகின்றனர். நள்ளிரவு தாண்டியும் தொடர்ந்து மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும், ராஜபக்ச குடும்பத்தின் அனைத்து உறுப்பினர்களையும் பதவி விலகுமாறு மக்கள் கோரிவருகின்றனர்.
அதிபர் கோட்டாபய ராஜபக்சவின் மூத்த சகோதரர் மகிந்த ராஜபக்ச பிரதமராக கடமையாற்றுகிறார், அதேவேளை இளைய சகோதரர் பசில் ராஜபக்ச நிதி இலாகாவை வைத்துள்ளார். மூத்த சகோதரர் சமல் ராஜபக்ச விவசாய அமைச்சராகவும், மகிந்த ராஜபக்சவின் மகன் நாமல் ராஜபக்ச விளையாட்டுத்துறைக்கான அமைச்சரவை பதவியை வகிக்கிறார்.
டீசல் இல்லை
வியாழன் அன்று இலங்கை முழுவதும் டீசல் விற்பனைக்கு வரவில்லை, போக்குவரத்து முடங்கியது. வரலாறு காணாத மின்சார தடையால் நாட்டின் 2.2 கோடி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். முன்னதாக பெட்ரோல் விற்பனைக்கு வந்தாலும் தட்டுப்பாடு ஏற்பட்டதால், வாகன ஓட்டிகள் நீண்ட வரிசையில் நின்று கார்களை நிறுத்த வேண்டிய நிலை ஏற்பட்டது.
எரிபொருள் தட்டுப்பாட்டால் பேருந்து சேவை முடக்கம்
டீசல் தட்டுப்பாடு சமீப நாட்களில் இலங்கை முழுவதும் சீற்றத்தை ஏற்படுத்தியது, ஆனால் நேற்று தொடங்கிய ஆர்ப்பாட்டத்திற்கு முன், இதுவரை நகரங்களில் எதிர்ப்புக்கள் இருந்ததே தவிர, எந்த ஒரு உயர்மட்ட தலைவரையும் குறிவைத்து மக்கள் போற்றத்தில் ஈடுபடவில்லை.
“கேரேஜில் உள்ள பேருந்துகளில் பழுதுபார்ப்பதற்காக இருந்த எரிபொருளை வெளியேற்றி, அந்த டீசலை பயன்படுத்தி சேவை செய்யக்கூடிய வாகனங்களை இயக்குகிறோம்” என போக்குவரத்து அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்தார்.
நாட்டின் இயங்கும் பேருந்து சேவைகளில் மூன்றில் இரண்டு பங்கைக் கொண்ட தனியார் பேருந்துகளின் உரிமையாளர்கள், ஏற்கனவே எண்ணெய் தீர்ந்துவிட்டதாகவும், வெள்ளிக்கிழமைக்குப் பிறகு குறைந்தபட்ச அடிப்படை சேவைகள் கூட சாத்தியமில்லை என்றும் கூறினார்.
மின்சாரப் பற்றாக்குறை
மின்சாரத்தைச் சேமிப்பதற்காக தெரு விளக்குகளை அணைத்து வருவதாக அமைச்சர் ஒருவர் வியாழக்கிழமை தெரிவித்தார். ஜெனரேட்டர்களுக்கு கூட டீசல் இல்லாததால் 13 மணி நேர மின்வெட்டை மின்துறை அமுல்படுத்தியது.