தமிழக மீனவர்கள் எல்லை தாண்டுவதை தடுக்க வேண்டும் - இந்திய அரசுக்கு இலங்கை கோரிக்கை
தமிழக மீனவர்கள் எல்லை தாண்டுவதை இந்திய அரசு தடுக்க வேண்டும் என இலங்கை அமைச்சர் கோரிக்கை வைத்துள்ளார்.
மீனவர் பிரச்சனை
தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடிப்பதாக கூறி, இலங்கை கடற்படை அவர்களை கைது செய்வது நீண்டகால பிரச்சனையாக இருந்து வருகிறது.
இவ்வாறு மீனவர்கள் கைது செய்யப்படும் போதெல்லாம், மீனவர்களை மீட்குமாறு தமிழக அரசு மத்திய அரசுக்கு கடிதம் எழுதி வந்தாலும், இந்த பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காணப்படவில்லை.
இந்த மீனவர் பிரச்சனைக்கு இந்திய அரசு தீர்வு காண வேண்டுமென இலங்கை போக்குவரத்து, துறைமுகங்கள் துறை அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
அமைச்சர் பிமல் ரத்நாயக்க
இது தொடர்பாக இலங்கை நாடாளுமன்றத்தில் பேசிய அவர், "போர் காலத்தில் இலங்கைக்கு இந்தியா பெரும் அளவுக்கு உதவி செய்திருப்பது நம் அனைவருக்கும் தெரியும். அதற்கு நாம் நன்றியுடையவர்களாக இருப்போம்.
இந்திய மீனவர்கள் இலங்கை கடல் எல்லைக்குள் நுழைவதை மத்திய அரசும் தமிழக அரசும் தடுக்க வேண்டும். இலங்கையின் வடக்கு பகுதி மக்கள் மீன் பிடித்தலையே ஒரே வாழ்வாதாரமாக கொண்டுள்ளனர்.
இந்திய அரசு, இலங்கை அரசாங்கத்திற்கு எவ்வளவு உதவி செய்திருந்தாலும், மீனவர்கள் பிரச்சினையில் வடக்கு பகுதி மக்களுக்கு உதவத் தவறினால், அது அவர்களின் மற்ற அனைத்து உதவிகளும் உண்மையானவையா என்ற கேள்வியை எழுப்பும்" என பேசினார்.
இந்திய பிரதமர் நரேந்திர மோடி, அடுத்த மாதம் இலங்கைக்கு வர உள்ள நிலையில், அமைச்சரின் இந்த கருத்துகள் வெளியாகியுள்ளது.
"இந்திய பிரதமர் மோடி இலங்கை வரும் போது இந்திய மீனவர்கள் சட்டத்தை மீறி இலங்கை எல்லைக்குள் மீன் பிடிப்பது குறித்து பேச வேண்டும்," என எதிர்க்கட்சி எம்.பி மனோ கணேசன் கோரிக்கை வைத்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |