பிரான்சில் இலங்கையருக்கு கிடைத்த கௌரவம்! சுவாரஸ்ய தகவல்கள்
பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் நடைபெறும் பாரம்பரியம் மிக்க பாண் தயாரிக்கும் போட்டி ஒன்றில் முதல் பரிசைப் பெற்றுள்ளார் இலங்கையர் ஒருவர்.
அன்று பாண் தயாரிப்பே தெரியாத நபருக்கு இன்று முதல் பரிசு
2006இல் இலங்கையிலிருந்து பிரான்ஸ் வந்த தர்ஷன் செல்வராஜா (Tharshan Selvarajah, 37), ஓராண்டு சட்டம் பயின்றபின் இத்தாலிய உணவகம் ஒன்றில் வேலைக்கு சேர்ந்துள்ளார்.
தர்ஷன் வேலை செய்யும் உணவகத்துக்கு, அருகிலுள்ள பேக்கரி ஒன்றின் உரிமையாளரான Xavier Maulavé என்பவர் மதிய உணவு சாப்பிட வருவாராம். ஒரு கட்டத்தில் உணவகம் விற்பனை செய்யப்பட, தன் பேக்கரிக்கு வந்துவிடுமாறு தர்ஷனை அழைத்துள்ளார் Xavier.
அங்கு பிரபலமான baguette என்னும் பாண் தயாரிக்கக் கற்றுக்கொண்ட தர்ஷன், இன்று baguette தயாரிக்கும் போட்டியில் முதல் பரிசு வென்றுள்ளார் என்றால் ஆச்சரியம்தானே!
பிரான்ஸ் ஜனாதிபதிக்கு பாண் அனுப்பும் வாய்ப்பு
ஆம், பிரான்சின் பிரபலமான baguette என்னும் பாண் தயாரிக்கும் போட்டியில் பங்கேற்ற 126 பேரில் தர்ஷனுக்கு முதல் பரிசு கிடைத்துள்ளது.
அவருக்கு 4,000 யூரோக்கள் பரிசாக கிடைத்துள்ளதுடன், பிரான்ஸ் ஜனாதிபதியான இமானுவல் மேக்ரானுக்கு baguettes தயாரித்து அனுப்பும் கௌரவமும் கிடைத்துள்ளது.
ஒரு புலம்பெயர்ந்தவராக பிரான்சுக்குவந்த தர்ஷன், இன்று பிரான்ஸ் ஜனாதிபதிக்கே பாண் தயாரித்து அனுப்பும் கௌரவம் கிடைத்ததால் மகிழ்ச்சி அடைந்துள்ளார்.
ஜனாதிபதி என்னுடைய பாணை சுவைக்கப்போகிறார் என்பதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி என்று கூறும் தர்ஷன், பாணை ஜனாதிபதி மாளிகைக்குக் கொண்டு செல்லப்போவது குறித்த எண்ணமே தன்னை புளகாங்கிதம் அடையச் செய்வதாக கூறுகிறார்.