கொழும்பு சென்ற விமானத்தில் குழந்தை பெற்றெடுத்த இலங்கைப் பெண்
srilankan women birth baby aboard from kuwait: இலங்கையை சேர்ந்த 30 வயதான பெண், குவைத்திலிருந்து இலங்கைக்கு வரும் போது விமானத்திலே ஆண் குழந்தையை பெற்றெடுத்துள்ளார்.
விமானத்தில் குழந்தை பெற்றெடுத்த இலங்கைப் பெண்
இலங்கையின் திரிகோணமலையை சேர்ந்த 30 வயதான பெண் ஒருவர், கடந்த 2 ஆண்டுகளாக குவைத்தில் வீட்டு வேலைகளை செய்யும் பணி பெண்ணாக வேலை பார்த்து வந்துள்ளார்.
அந்த 30 வயதான பெண், குவைத்திலிருந்து அதிகாலை 2;50 மணிக்கு ஜசீரா ஏர்வேஸ் விமானம் J9-551 மூலம் கொழும்பு நோக்கி புறப்பட்டுள்ளார்.

கர்ப்பமாக இருந்த அந்த பெண், விமானத்தில் பயணம் செய்யும் கர்ப்பிணிப் பயணிகளுக்குப் பொருந்தக்கூடிய கட்டுப்பாடுகள் மற்றும் மருத்துவ வழிகாட்டுதல்களைத் தவிர்ப்பதற்காக, தனது கர்ப்பத்தை விமான நிறுவன அதிகாரிகளிடம் தெரிவிக்கவில்லை என்று கூறப்படுகிறது.
இதனிடையே விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்த போது பிரசவ வலி ஏற்பட்ட நிலையில், விமானப் பணியாளர்களின் உதவியுடன், அந்தப் பெண் நடுவானில் ஒரு ஆண் குழந்தையை பெற்றெடுத்தார்.
இந்த சம்பவம் குறித்து, விமானத்தின் கேப்டன் உடனடியாக பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலைய அதிகாரிகளுக்கு தகவல் அளித்தார்.
விமானம் தரையிறங்கிய போது, உடனடி மருத்துவ உதவி வழங்குவதற்காக, ஒரு ஆம்புலன்ஸும், மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் அடங்கிய குழுவும் விமான நிலையத்தில் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தன.
அதன் பின்னர் மேலதிக மருத்துவப் பரிசோதனை மற்றும் சிகிச்சைக்காக தாயும் அவரது பச்சிளம் குழந்தையும் உடனடியாக நீர்கொழும்பு பொது மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர்.
தாயும் குழந்தையும் நலமுடன் உள்ளதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.