மூன்று டோஸ் தடுப்பூசி... மேடையில் சுருண்டு விழுந்த பிரபலம்: இரத்த காயங்களுடன் மீட்பு
அமெரிக்காவின் அரிசோனா மாகாணத்தில் கொரோனா தொடர்பில் நகைச்சுவையாக பேசிக்கொண்டிருந்த நகைச்சுவை நடிகர் ஒருவர் திடீரென்று சுருண்டு விழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
அரிசோனா மாகாணத்தில் டெம்பே பகுதியில் நடந்த நகைச்சுவை நிகழ்ச்சி ஒன்றின் இடையிலேயே பிரபல நகைச்சுவை நடிகர் ஹீதர் மெக்டொனால்ட் சுருண்டு விழுந்துள்ளார்.
51 வயதான ஹீதர் மெக்டொனால்ட் மூன்று டோஸ் தடுப்பூசி போட்டுக்கொண்டவர் மட்டுமின்றி, சுகாதாரத்துறையின் கொரோனா விதிகளுக்கு உட்பட்டு தமது நிகழ்ச்சிகளை முன்னெடுத்தும் வருகிறார்.
இந்த நிலையில், சனிக்கிழமை இரவு டெம்பே பகுதியில் நிகழ்ச்சியின் நடுவே கொரோனா தொற்று தொடர்பில் நகைச்சுவையாக பேசிக்கொண்டிருந்தவர் திடீரென்று மேடையில் சுருண்டு விழுந்துள்ளார்.
இதில் அவருக்கு தலையில் பலத்த காயமேற்பட்டதுடன், இரத்தம் வழிய அங்கிருந்து மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். தமது நிலை குறித்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள ஹீதர் மெக்டொனால்ட், தொடர்ந்து நிகழ்ச்சிகள் மேற்கொண்டதால் ஏற்பட்ட பாதிப்பாக இருக்கலாம் எனவும், தாம் இப்போது மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் இருப்பதாகவும் பதிவிட்டுள்ளார்.
இப்படியான ஒரு சூழலை தாம் எதிர்பார்க்கவே இல்லை எனவும், தமது நிகழ்ச்சியை காண வந்த அனைவரையும் வெளியேற்றி, பின்னர் இரண்டாவது காட்சியை ரத்து செய்ய நேர்ந்ததில் தாம் மிகவும் வருந்துவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். குணமடைந்த பின்னர் ஒருமுறை டெம்பே பகுதியில் கண்டிப்பாக நிகழ்ச்சியை முன்னெடுப்பேன் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.