லண்டனில் பிரதமர் ஸ்டார்மருடன் கடும் வார்த்தைப் போரில் ஈடுபட்ட இஸ்ரேல் ஜனாதிபதி
லண்டனில் பிரதமர் ஸ்டார்மருடனான சந்திப்பு கடும் வாக்குவாதத்தில் முடிந்ததாக இஸ்ரேல் ஜனாதிபதி ஐசக் ஹெர்சாக் தெரிவித்துள்ளார்.
கருத்து வேறுபாடு
ஒருவருக்கொருவர் தங்கள் நாட்டின் சமீபத்திய நகர்வுகள் குறித்து ஆழமான கருத்து வேறுபாடுகளை வெளிப்படுத்தியதாகவும் ஹெர்சாக் தெரிவித்துள்ளார்.
பிரித்தானியாவின் நேச நாடான கத்தாரில் ஹமாஸ் அரசியல் தலைவர் ஒருவரை படுகொலை செய்யும் நோக்கில் இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதன் ஒரு நாளுக்குப் பின்னர் லண்டனில் இரு தலைவர்களின் சந்திப்பு நடந்துள்ளது.
கத்தார் மீதான இஸ்ரேலின் தாக்குதலை ஸ்டார்மர் கடுமையாக கண்டித்திருந்தார். ஆனால், பிரான்ஸ், கனடா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் பல பாலஸ்தீன தேசத்தை அங்கீகரிக்கும் முடிவுக்கு பிரித்தானியா ஆதரவளிப்பதில் இஸ்ரேல் கடும் கோபம் கொண்டுள்ளது.
பாலஸ்தீன தேசத்தை அங்கீகரிப்பதும், காஸா மக்களுக்கு மனிதாபிமான உதவிகள் முன்னெடுப்பதில் ஸ்டார்மரின் கருத்துகளும் தற்போதைய கருத்து வேறுபாட்டிற்கு காரணம் என ஹெர்சாக் தெரிவித்துள்ளார்.
மட்டுமின்றி, உண்மை கண்டறியும் பணியை மேற்கொள்ள பிரித்தானிய அரசாங்கத்தை அவர் இஸ்ரேலுக்கு அழைத்திருந்தார். இதனிடையே, ஸ்டார்மரின் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
காஸா மீதான இஸ்ரேலின் திட்டத்தை மாற்ற வேண்டும் என பிரித்தானிய பிரதமர் வாதிட்டதாகவும், மனிதாபிமான நெருக்கடி குறித்து ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்தியதோடு, இஸ்ரேல் உதவிகளை அனுமதிக்கவும், தாக்குதல் நடவடிக்கைகளை நிறுத்தவும் வலியுறுத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்டார்மர் உறுதியாக
இருப்பினும் இஸ்ரேலும் பிரித்தானியாவும் நீண்டகால நட்பு நாடுகள் என்பதில் மாற்றுக்கருத்தில்லை என்றும் இஸ்ரேலியர்களுக்கும் பாலஸ்தீனியர்களுக்கும் நீடித்த அமைதியை நோக்கிப் பாடுபடுவதில் ஸ்டார்மர் உறுதியாக இருப்பதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
முன்னதாக பிரதமர் அலுவலக வாசலில் தலைவர்கள் இருவரும் இறுகிய முகத்துடன் கை குலுக்கியதும் பேசு பொருளானது. கத்தார் மீதான தாக்குதலை கடுமையாக கண்டித்துள்ள ஸ்டார்மர், அப்படியான ஒரு நகர்வை ஒருபோதும் ஏற்க முடியாது என்றும் இஸ்ரேல் ஜனாதிபதியிடம் தெரிவித்துள்ளார்.
காஸா மீதான போரானது பிரித்தானியா மற்றும் பிற ஐரோப்பிய நாடுகளுடனான இஸ்ரேலின் உறவுகளைப் பாதித்துள்ளது. மேலும், இந்த வாரம் நடைபெறும் மிகப்பெரிய பாதுகாப்பு வர்த்தக கண்காட்சியில் இஸ்ரேலிய அதிகாரிகள் கலந்து கொள்வதை பிரித்தானியா தடுத்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |