பயங்கரவாதத்தை ஆதரிக்கும் ஸ்டார்மர்.... பதிலடி உறுதி: கொந்தளித்த நெதன்யாகு
பாலஸ்தீன அரசாங்கத்தை பிரித்தானியா அங்கீகரிப்பதாக அறிவித்துள்ள நிலையில், பிரதமர் ஸ்டார்மர் பயங்கரவாதத்திற்கு ஆதரவளிப்பதாக இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு சாடியுள்ளார்.
உரிய பதில் அளிக்கப்படும்
ஜோர்டானுக்கு மேற்கே பாலஸ்தீன நாடு என்பதே இல்லை என அழுத்தமாக தெரிவித்துள்ள நெதன்யாகு, பாலஸ்தீன அரசாங்கத்தை அங்கீகரித்துள்ள நாடுகளுக்கு உரிய பதில் அளிக்கப்படும் என்பது உறுதி எனவும் தெரிவித்துள்ளார்.
இது பயங்கரவாதத்திற்கு ஒப்புதல் அளிப்பது போன்றது என குறிப்பிட்டுள்ள நெதன்யாகு, அமெரிக்காவில் இருந்து நாடு திரும்பியதும், விரிவான பதிலளிக்கப்படும் என்றார்.
அக்டோபர் 7 ஆம் திகதி நடந்த கொடூரமான படுகொலைக்குப் பிறகு பாலஸ்தீன அரசை அங்கீகரிக்கும் தலைவர்களுக்கு சொல்லிக்கொள்ள எனக்கு ஒரு தெளிவான செய்தி உள்ளது, நீங்கள் பயங்கரவாதத்திற்கு மிகப்பெரிய வெகுமதியை வழங்குகிறீர்கள் என அவர் அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்.
பாலஸ்தீன நாடு என்பதே இல்லை என்ற நிலையில், அரசாங்கமும் உருவாகப்போவதில்லை என்றார். முன்னதாக, பாலஸ்தீனியர்களுக்கும் இஸ்ரேலியர்களுக்கும் அமைதிக்கான நம்பிக்கையை மீண்டும் உயிர்ப்பிக்கவே பாலஸ்தீன அரசாங்கத்தை அங்கீகரிக்கும் முடிவுக்கு வந்ததாக ஸ்டார்மர் தெரிவித்துள்ளார்.
75 ஆண்டுகளுக்கு முன்பே
இந்த வாரம் நடக்கவிருக்கும் ஐ.நா. பொதுச் சபைக் கூட்டத்தொடருக்கு முன்னதாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பிரித்தானியா மட்டுமின்றி, அவுஸ்திரேலியா மற்றும் கனடாவும் பாலஸ்தீன அரசாங்கத்தை அங்கீகரிக்க இருப்பதாக அறிவித்துள்ளது.
இஸ்ரேல் போர் நிறுத்தத்திற்கு ஒப்புக் கொள்ளாவிட்டால், பாலஸ்தீன அரசை அங்கீகரிப்பதாக ஜூலை மாதம் ஸ்டார்மர் அறிவித்திருந்தார். தற்போது காணொளி ஒன்றை வெளியிட்டு, 75 ஆண்டுகளுக்கு முன்பே இஸ்ரேல் நாட்டை யூத மக்களின் தாயகமாக நாங்கள் அங்கீகரித்தோம்.
இன்று நாம் பாலஸ்தீன அரசை அங்கீகரிக்கும் 150க்கும் மேற்பட்ட நாடுகளுடன் இணைகிறோம் என ஸ்டார்மர் குறிப்பிட்டுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |