டிஜிட்டல் அடையாள அட்டை கட்டாயம்... அந்தர் பல்டி அடித்த பிரித்தானிய பிரதமர்
பிரித்தானிய பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் தனது கொள்கைகளில் உறுதியாக இல்லை, எடுத்த முடிவுகளை மாற்றிக்கொண்டே இருக்கிறார் என்னும் ஒரு குற்றச்சாட்டு உள்ளது.
இந்நிலையில், பிரித்தானியாவில் வேலை செய்ய டிஜிட்டல் அடையாள அட்டை கட்டாயம் என அறிவித்திருந்த பிரதமர் ஸ்டார்மர், அந்த முடிவிலிருந்தும் பின்வாங்கியுள்ளார்!
டிஜிட்டல் அடையாள அட்டை
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம், பிரித்தானியாவில் பணி செய்ய டிஜிட்டல் அடையாள அட்டை கட்டாயமாக்கப்படும் என அரசு அறிவித்தது.

அப்போது, உங்களிடம் டிஜிட்டல் அடையாள அட்டை இல்லையென்றால், உங்களால் பிரித்தானியாவில் வேலை செய்ய முடியாது என்று கூறியிருந்தார் ஸ்டார்மர்.
குறிப்பாக, சட்டவிரோத புலம்பெயர்ந்தோர் பிரித்தானியாவில் வேலை செய்வதைத் தடுக்கும் வகையில் இந்த டிஜிட்டல் அடையாள அட்டை முறை கொண்டுவரப்பட இருப்பதாக அப்போது தகவல் வெளியாகியிருந்தது.
காகித அடையாள அட்டையை போலியாக உருவாக்க முடியும் என்பதாலும், சட்டவிரோத புலம்பெயர்ந்தோருக்கு பணி வழங்குவோர், போலியாக தாங்கள் அடையாள அட்டையை சோதித்துவிட்டதாக ஏமாற்ற முடியும் என்பதாலும், அந்த மோசடிகளைத் தவிர்க்கும் வகையில் டிஜிட்டல் அடையாள அட்டை நடைமுறை பயன்பாட்டுக்கு வர இருப்பதாக தகவல் வெளியானது.
அந்தர் பல்டி அடித்த பிரித்தானிய பிரதமர்
இந்நிலையில், டிஜிட்டல் அடையாள அட்டை திட்டத்திலிருந்து ஸ்டார்மர் பின்வாங்கியுள்ளார்.
டிஜிட்டல் அடையாள அட்டை முறைக்கு, கடும் எதிர்ப்பு உருவானது. ஆளும் லேபர் கட்சியினரே அதற்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தார்கள்.

Credit : Carl Court/Getty Images
அத்துடன், அரசின் புகார் மனு இணையதளத்தில் பிரதமரின் கட்டாய அடையாள அட்டை திட்டத்துக்கு எதிராக ஒரு புகார் மனு முன்வைக்கப்பட்டது. 24 மணி நேரத்தில் டிஜிட்டல் அடையாள அட்டை திட்டத்துக்கு எதிராக 650,000 பேர் கையெழுத்திட்டார்கள்.
ஆக, எழுந்த எதிர்ப்பைத் தொடர்ந்து, கட்டாய டிஜிட்டல் அடையாள அட்டை திட்டத்திலிருந்து பிரதமர் ஸ்டார்மர் பின்வாங்கியுள்ளார்.
விடயம் என்னவென்றால், அதற்கும் அவர் மீது கடும் விமர்சனம் முன்வைக்கப்பட்டுள்ளது.
ஸ்டார்மர் முதுகெலும்பில்லாதவர் என்றும், கொள்கைகளை மாற்றுவதே லேபர் அரசுக்கு வழக்கமாகிவிட்டது என்றும் எதிர்க்கட்சிகள் விமர்சனம் முன்வைத்துள்ளன.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |