உக்ரைன் தானியங்களுடன் தப்பிய ரஷ்ய சரக்கு கப்பல்: தட்டித்தூக்கிய துருக்கி அதிகாரிகள்
ஆயிரக்கணக்கான டன் உக்ரைன் தானியங்களுடன் தப்பிய ரஷ்ய கப்பல் ஒன்று துருக்கி அதிகாரிகளிடம் வசமாக சிக்கிய சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
உக்ரைனில் இருந்து திருடப்பட்டதாகக் கூறப்பட்டதை அடுத்து கருங்கடல் துறைமுகமான கராசுவில் துருக்கிய அதிகாரிகளால் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.
உக்ரைன் அதிகாரிகள் தரப்பு இந்த விவகாரம் தொடர்பில் துருக்கி அதிகாரிகளை தொடர்புகொண்டு எச்சரித்த நிலையில், 7000 டன் தானியங்களுடன் Zhibek Zholy என்ற சரக்கு கப்பல் மீட்கப்பட்டுள்ளது.
தொடர்புடைய கப்பல் தற்போது துறைமுகத்திற்கு வெளியே காத்திருப்பதாகக் கூறிய கராசுவில் உள்ள அதிகாரிகள், கப்பலின் சரக்கு தொடர்பான ஆவணம் குறித்து விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவித்துள்ளனர்.
Zhibek Zholy என்ற சரக்கு கப்பல் ரஷ்யாவினுடையது என்பதை உறுதி செய்துள்ள அந்த நாட்டின் வெளிவிவகார அமைச்சர், ஆனால் இந்த விவகாரம் தொடர்பில் உண்மையான தரவுகள் வெளியிடப்பட வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
மட்டுமின்றி, ரஷ்ய கொடியுடன் கூடிய கப்பல் தான், ஆனால் கஜகஸ்தானுக்கு சொந்தமானது என்று நினைக்கிறேன், எஸ்டோனியா மற்றும் துருக்கி இடையே ஒப்பந்தத்தில் சரக்கு கொண்டு செல்லப்பட்டது தான் உண்மை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்பு தொடங்கிய பிப்ரவரி 24ம் திகதிக்கு பின்னர், முக்கிய உக்ரைன் துறைமுகங்களை கட்டுப்பாட்டில் கொண்டுவந்த ரஷ்யா, இங்குள்ள தானியங்களை கொள்ளையிட்டு சட்டவிரோதமாக சர்வதேச சந்தைகளில் விற்பனை செய்து வருவதாக உக்ரைன் தொடர்ந்து குற்றஞ்சாட்டி வருகிறது.
உலக நாடுகளுக்கு தேவையான தானியத்தில் 15% அளவுக்கு உக்ரைனில் இருந்தே ஏற்றுமாதியாகிறது. மட்டுமின்றி, உக்ரைன் தானியங்களை ஏற்றுமதி செய்வதில் தற்போது கடும் சிக்கலும் நீடித்து வருகிறது.
இந்த நிலையில் தான் ரஷ்ய கட்டுப்பாட்டு பகுதியில் இருந்து முதல் தடவையாக வணிக ரீதியில் தானியங்கள் ஏற்றுமதி செய்யப்படுவதாக அப்பகுதியின் ரஷ்ய அதிகாரி ஒருவர் அறிவித்துள்ளார்.
இதனையடுத்தே உக்ரைன் தரப்பு, அது கொள்ளையிடப்பட்ட தானியங்கள் என துருக்கி நிர்வாகத்தை எச்சரித்தது.
துருக்கி தற்போது தொடர்புடைய கப்பலை தடுத்து நிறுத்தியுள்ளதுடன், தானியங்கள் குறித்து விரிவான விசாரணைக்கும் உத்தரவிட்டுள்ளது.