வானில் தோன்றிய விநோதக் காட்சி... ரஷ்யாவின் இரகசிய ஆயுதம் என பயந்த மக்கள்
அமெரிக்காவில் வானில் தோன்றிய ஒரு விநோதக் காட்சியைக் கண்ட மக்களுக்கு அச்சமும் குழப்பமும் ஏற்பட்டது.
வானிலிருந்து பெரிய ஏவுகணை ஒன்று பூமியை நோக்கி விழுவதைப் போல தோன்றிய அந்தக் காட்சியைக் கண்ட மக்கள், விமானம் ஒன்று எரிந்து விழுகிறதா, அல்லது அது உக்ரைன் போர் தொடர்பிலான ஒரு இரகசிய ரஷ்ய ஆயுதமா என்றெல்லாம் எண்ணி அஞ்சத் துவங்கிவிட்டார்கள்.
வேறு சிலரோ, வழக்கமான அமெரிக்கர்களைப்போல, அது ஒரு பறக்கும் தட்டு அல்லது விண்கல் அல்லது சேட்டிலைட் ஒன்று பூமியில் விழுகிறது என எண்ணியுள்ளார்கள்.
நேற்று காலை 7.00 மணியளவில், அலாஸ்காவிலுள்ள Lazy Mountain பகுதியில் இந்த காட்சி தோன்றியுள்ளது.
இந்த விடயம் சமூக ஊடகங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தவே, அது என்ன என்பதை அறிவதற்காக பொலிசார் விசாரணையில் இறங்கியுள்ளனர்.
பின்னர், விமானம் எதுவும் மாயமாகவில்லை, விமான விபத்து எதுவும் நிகழவில்லை என அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.
அத்துடன், இன்று காலை, மீட்புக் குழுவினரின் ஹெலிகொப்டர் ஒன்றும் அந்த பகுதிக்குச் சென்று அங்கு ஆய்வு மேற்கொண்டதில், அங்கு விமான விபத்து எதுவும் நிகழ்ந்ததற்கான அடையாளம் எதுவும் காணப்படவில்லை என அவர்களும் தெரிவித்துள்ளார்கள்.
கடைசியாக, அது ஜெட் விமானம் ஒன்று சென்றதால் உருவான புகையாக இருக்கலாம் என அதிகாரிகள் விளக்கமளித்துள்ளார்கள்..