எங்கள் நிலை வலுவாக உள்ளது... ரஷ்யா மீதான படையெடுப்பு தொடர்பில் ஜெலென்ஸ்கி அதிரடி
ரஷ்யாவின் குர்ஸ்க் பிராந்தியத்தில் ஊடுருவியுள்ள உக்ரைன் ராணுவம் வலுவான நிலையில் உள்ளதாக ஜனாதிபதி ஜெலென்ஸ்கி அதிரடியாக அறிவித்துள்ளார்.
தங்கள் ராணுவம் வலுவாக
உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பு தொடங்கி 907 நாட்கள் கடந்துள்ள நிலையில், தற்போது அதிரடி திருப்பமாக ரஷ்யா மீது சத்தமேயில்லாமல் உக்ரைன் படையெடுத்துள்ளது.
குர்ஸ்க் பிராந்தியத்தில் நுழைந்துள்ள உக்ரைன் படைகள் 80 குடியிருப்பு பகுதிகளை கைப்பற்றியுள்ளதுடன் 1,150 சதுர கி.மீ தொலைவுக்கு முன்னேறியுள்ளது. இந்த நிலையில் உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி தெரிவிக்கையில்,
குர்ஸ்க் பிராந்தியத்தில் தங்கள் ராணுவம் வலுவாக உள்ளது என்றும், திட்டமிட்டது போன்று முன்னேறி வருவதாகவும், ரஷ்ய வீரர்கள் பலர் கைதாகியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
உக்ரைனின் இந்த அதிரடி நடவடிக்கை என்பது இரண்டாம் உலகப் போருக்கு பின்னர் ரஷ்யா எதிர்கொள்ளும் மிகப்பெரிய நெருக்கடி என்றே கூறப்படுகிறது. மட்டுமின்றி, குர்ஸ்க் பிராந்திய மக்கள் தற்போது ரஷ்ய நிர்வாகத்தை விமர்சிக்கத் தொடங்கியுள்ளதுடன், தங்கள் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
இதனிடையே, ரஷ்யா மீது நீண்ட தூர தாக்குதல்களை அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கையை தமது மேற்கத்திய நட்பு நாடுகளிடம் ஜெலென்ஸ்கி மீண்டும் முன்வைத்துள்ளார்.
உக்ரைனுக்கு ஆயுத உதவிகள் அளித்துவரும் அமெரிக்கா, பிரித்தானியா, ஜேர்மனி, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகள் ரஷ்யா மீது ஏவுகணை தாக்குதல்களை முன்னெடுக்க அனுமதி மறுத்து வருகிறது.
சர்வதேச சட்டங்களின் அடிப்படையில்
ஏவுகணை பயன்பாடு அனுமதிக்கப்பட்டால், அது போரின் இதுவரையான தன்மையை கண்டிப்பாக மாற்றும் என உக்ரைன் தரப்பு வாதிட்டு வருகிறது. ஆனால் ராணுவ உதவிகளை அளித்துவரும் மேற்கத்திய நாடுகளின் அரசாங்கம் உக்ரைனுக்கு அந்த அனுமதியை மறுத்துவருகிறது.
இருப்பினும், ரஷ்யாவுக்குள் தங்கள் ஆயுதங்களை உக்ரைன் பயன்படுத்தலாம் என பிரித்தானியாவும் அமெரிக்காவும் சில நிபந்தனைகளுடன் அனுமதி அளித்துள்ளது. இதனால் ரஷ்யா மீதான உக்ரைனின் படையெடுப்புக்கு பின்னால் நேட்டோ நாடுகள் இருப்பதாக ரஷ்யா குற்றஞ்சாட்டியுள்ளது.
அத்துடன் ரஷ்யாவுக்குள் மேற்கத்திய நாடுகளின் ஆயுதங்களை உக்ரைன் பயன்படுத்துவதாகவும் குறிப்பிட்டுள்ளது. சர்வதேச சட்டங்களின் அடிப்படையில் மட்டுமே ரஷ்யாவுக்குள் தங்கள் ஆயுதங்களை உக்ரைன் பயன்படுத்துவதாக பிரித்தானியா விளக்கமளித்துள்ளது.
உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பில் இதுவரை 598,180 வீரர்களை அந்த நாடு இழந்துள்ளது என உக்ரைன் தரப்பு தெரிவித்துள்ளது. இதில், கடந்த 24 மணி நேரத்தில் 1,230 வீரர்களை ரஷ்யா இழந்துள்ளதும் உட்படும் என உக்ரைன் குறிப்பிட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |