பிரித்தானிய மருத்துவமனைகளில் ஸ்தம்பிக்கும் அவசரப்பிரிவு: சிறார்கள் தரையில் படுக்கவைக்கும் பரிதாபம்
பிரித்தானியாவில் திடீரென்று Strep A பரவல் அதிகரித்துள்ள நிலையில், பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுடன் மருத்துவமனைகளில் படையெடுத்துள்ளனர். இதனால், பெரும்பாலான மருத்துவமனைகளில் A&E பிரிவு ஸ்தம்பிக்கும் அளவுக்கு கைமீறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இப்படியான சூழலை எதிர்பார்க்கவே இல்லை
தாயார் ஒருவர் தமது 5 வயது மகனுக்கு Strep A பாதிப்பின் அறிகுறிகள் காணப்பட்ட நிலையில், மகனுடன் பீட்டர்பரோ சிட்டி மருத்துவமனைக்கு விரைந்துள்ளார். சிறுவன் மூச்சுவிட சிரமப்பட்டதாகவும், காய்ச்சல் 40C வரை எட்டியதால் பயந்துபோன அவர் உடனடியாக மருத்துவமனைக்கு விரைந்துள்ளார்.
@getty
ஆனால், மருத்துவமனை ஊழியர்கள் செய்வதறியாது திணறுவதாகவும், தங்கள் பிள்ளைகளுடன் பல பெற்றோர்கள் மணிக்கணக்காக தரையில் அமர்ந்திருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இப்படியான ஒரு சூழலை தாம் எதிர்பார்க்கவே இல்லை எனவும், காத்திருக்கும் அறையில் கூட மக்கள் கூட்டம் அதிகம் காணப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார். அந்த மருத்துவமனையில் காணப்படும் அனைத்து நாற்காலிகளும் மக்கள் பயன்பாட்டில் இருந்தது.
சிறுவனின் உதடுகள் நீல நிறத்தில்
மக்கள் தரையில் அமர்ந்திருப்பதுடன், பிள்ளைகள் தரையில் தூங்குவதையும் தம்மால் பார்க்க முடிந்தது என்றார். அந்த மருத்துவமனையில் காணப்பட்ட சிறார்கள் அனைவரும் மிகவும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இருப்பதை தம்மால் உணர முடிந்தது என கூறும் அவர், ஒரு சிறுவனின் உதடுகள் நீல நிறத்தில் மாறியிருந்தது எனவும், அவனால் மூச்சுவிடவும் முடியவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
தாம் அந்த மருத்துவமனைக்கு செல்லும் முன்னரே, பல மணி நேரமாக அவர்கள் காத்திருப்பதாகவும், இன்னமும் மருத்துவரை அவர்களால் சந்திக்க முடியவில்லை எனவும் அந்த தாயார் தெரிவித்துள்ளார்.
@getty
சுமார் 3 மணி நேரம் காத்திருந்த பின்னரும், பலனேதும் இல்லை என்பதை உணர்ந்த அந்த தாயார் மகனுடன் வேறுவழியின்றி குடியிருப்புக்கு திரும்பியதாக தெரிவித்துள்ளார்.
இதனிடையே, மக்கள் நேரிடையாக மருத்துவமனைக்கு விரையும் முன்னர், 111 இலக்கத்திற்கு தொடர்பு கொண்டு உரிய சிகிச்சை எங்கே அளிக்கப்படுகிறது என்பதை உறுதி செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளனர்.
பிரித்தானியாவில் Strep A பாதிப்புக்கு இதுவரை 16 சிறார்கள் சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.