லண்டன் மாணவி படுகொலையில் பொலிசார் அதிரடி: சிக்கிய வெளிநாட்டு இளைஞர்
லண்டனில் பல்கலைக்கழக மாணவி ஒருவர் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் தேடப்பட்டு வந்த ஆண் நண்பரை பொலிசார் கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
லண்டனில் சனிக்கிழமை காலை சுமார் 5 மணியளவில் மாணவர்களுக்கான விடுதி ஒன்றில் 19 வயதான சபிதா தன்வானி என்பவர் படுகொலை செய்யப்பட்டார்.
படுகாயங்களுடன் மீட்கப்பட்ட அவர், சம்பவயிடத்திலேயே மரணமடைந்துள்ளதாகவே மருத்துவ உதவிக்குழுவினர் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து பிரித்தானியப் பிரஜையின் மரணத்தைத் தொடர்ந்து பொலிசார் விசாரணையைத் தொடங்கினர், மேலும் அவரது ஆண் நண்பரான மகேர் மரூஃப் என்பவரை சந்தேகத்தின் அடிப்படையில் அவசரமாக தேடி வந்தனர்.
இந்த நிலையில் 22 வயதான துனிசியப் பிரஜை கொலை மற்றும் பொலிசார் மீது தாக்குதல் நடத்தியதாக கூறி கைது செய்யப்பட்டு காவலில் உள்ளதாக ஸ்கொட்லாந்து யார்டு உறுதிப்படுத்தியுள்ளது.
உளவியலில் முதலாம் ஆண்டு படித்து வந்த சபிதா, மார்ச் 19ம் திகதி அதிகாலை 5 மணிக்கு மேல் கழுத்தில் காயங்களுடன் மீட்கப்பட்டார். அவசர சிகிச்சைப் பிரிவினர் முன்னெடுத்த முயற்சிகள் தோல்வியடைய, அவர் சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது.
யுனைடெட் ஸ்டூடண்ட்ஸ் என்ற அமைப்பால் நடத்தப்படும் செபாஸ்டியன் தெருவில் உள்ள பிளாக்கில் வசித்துவந்த சபிதா தன்வானி அருகிலுள்ள லண்டன் சிட்டி பல்கலைக்கழகத்தின் மாணவி என்பது குறிப்பிடத்தக்கது.