டியூசன் எடுக்கும் ஆசிரியருக்கு 7,000 ராக்கி கயிறுகள் கட்டிய மாணவிகள்
இந்திய மாநிலம், பீகாரில் ரக்ஷா பந்தன் விழாவையொட்டி ஆசிரியர் ஒருவருக்கு மாணவர்கள் மற்றும் பெண்கள் சேர்ந்து 7 ஆயிரம் ராக்கி கயிறுகள் கட்டியுள்ள சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
ரக்ஷா பந்தன் விழா
சகோதரர்கள் மற்றும் சகோதரிகளுக்கான உறவை பலப்படுத்தும் பண்டிகையான ரக்ஷா பந்தன். ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் மாதம் முழு நிலவு அன்று இந்த பண்டிகை கொண்டாடப்படும்.
இந்த பண்டிகையில் சகோதரிகள் தங்களது சகோதரர் கையில் ராக்கி என்னும் புனித கயிறு ஒன்றை கட்டுவார்கள். தீயவற்றில் இருந்து சகோதரர்களைக் காப்பாற்றவும், அவர்களது நல்வாழ்வுக்காகவும், நீண்ட ஆயுளுக்காகவும் இந்த கயிறு கட்டுவது வழக்கமாக உள்ளது.
ஆசிரியருக்கு 7,000 ராக்கி கயிறுகள்
பீகார் மாநிலம், பாட்னாவில் கான் என்ற ஆசிரியர் ஒன்லைன் மூலமாகவும், டியூசன் மூலமாகவும் பாடம் எடுத்து வருகிறார். இவர், முழு அர்ப்பணிப்புடன் மாணவ, மாணவிகளுக்கு சிறப்பான முறையில் கல்வி கற்று கொடுத்து வருகிறார்.
இந்நிலையில் நேற்று இவர், ரக்ஷா பந்தனையொட்டி ராக்கி கயிறு கட்ட மாணவிகளுக்கு அழைப்பு விடுத்திருந்தார். இதனால் ஆயிரக்கணக்கான மாணவிகள், சிறுமிகள் மற்றும் பெண்கள் திரண்டு கான் கையில் ராக்கி கயிற்றை கட்டினர்.
இது குறித்து கான் கூறுகையில்,"சுமார் 7 ஆயிரம் பெண்கள் தனது மணிக்கட்டில் ராக்கி கட்டியதாகவும், இது உலக சாதனை என்றும்" தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |