18 நாட்கள் ஆய்வுப் பயணம் முடிந்தது! வெற்றிகரமாக பூமி திரும்பினார் சுபான்ஷு சுக்லா
இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா, ஆக்சியம்-4 திட்டத்தின் கீழ் சர்வதேச விண்வெளி நிலையத்தில் (ISS) 18 நாட்கள் அறிவியல் ஆய்வுகளை வெற்றிகரமாக முடித்துவிட்டு பூமிக்குத் திரும்பியுள்ளார்.
சக விண்வெளி வீரர்களான அமெரிக்காவின் பெக்கி விட்சன், ஹங்கேரியின் திபோர் கபு, மற்றும் போலந்தின் ஸ்லாவோஸ் உஸ்னான்ஸ்கி ஆகியோருடன் இணைந்து அவர் இந்தப் பயணத்தை மேற்கொண்டார்.
விண்வெளிப் பயணம்
கடந்த மாதம் 25 ஆம் திகதி, நான்கு விண்வெளி வீரர்களும் அமெரிக்காவின் புளோரிடாவில் உள்ள நாசாவின் கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து ஸ்பேஸ் எக்ஸ் டிராகன் விண்கலம் பொருத்தப்பட்ட ஃபால்கன்-9 ராக்கெட் மூலம் புறப்பட்டனர்.
28 மணி நேரப் பயணத்திற்குப் பிறகு, டிராகன் விண்கலம் 26 ஆம் திகதி மாலை சர்வதேச விண்வெளி நிலையத்தை அடைந்து, அதனுடன் வெற்றிகரமாக இணைக்கப்பட்டது. விண்வெளி வீரர்கள் உடனடியாக ISS-க்குள் நுழைந்து தங்கள் ஆய்வுப் பணிகளைத் தொடங்கினர்.
ஆய்வுகள் மற்றும் சாதனைகள்
ISS-ல் தங்கியிருந்த 18 நாட்களில், விண்வெளி வீரர்கள் மொத்தம் 60 அறிவியல் ஆய்வுகளில் ஈடுபட்டனர்.
இதில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) நடத்திய 7 சோதனைகளும் அடங்கும். இந்த ஆய்வுகள் விண்வெளி அறிவியல் மற்றும் மனித விண்வெளிப் பயணத்திற்கான முக்கிய தரவுகளை வழங்கியுள்ளன.
பூமிக்குத் திரும்புதல்
சுபான்ஷு சுக்லா மற்றும் அவரது குழுவினர் நேற்று மாலை 4:45 மணிக்கு ஸ்பேஸ் எக்ஸ் டிராகன் மூலம் ISS-லிருந்து புறப்பட்டனர்.
Captain Subhanshu Shukla's team returned to Earth after spending 18 days in space
— Headline Telugu News (@HeadlineTelugu) July 15, 2025
The crew of the International Space Station (ISS) returned to Earth after spending 18 days in space and landed safely in the Pacific Ocean near California.#SubhanshuShukla #ISS pic.twitter.com/7FOy4CZFZc
இன்று மதியம், டிராகன் விண்கலம் பூமியின் வளிமண்டலத்திற்குள் மீண்டும் நுழைந்தது. கலிபோர்னியா கடலுக்கு மேலே சுமார் 5.5 கிலோமீட்டர் உயரத்தில், விண்கலத்தின் இரண்டு சிறிய பாராசூட்டுகள் முதலில் திறந்தன.
அதன்பின்னர், நான்கு பெரிய பாராசூட்டுகள் விரிந்து, பசிபிக் பெருங்கடலில் உள்ள கலிபோர்னியா கடற்கரையில் பாதுகாப்பாகத் தரையிறங்கியது.
மீட்பு மற்றும் மருத்துவப் பரிசோதனைகள்
தரையிறங்கிய 10 நிமிடங்களுக்குள், ஸ்பேஸ் எக்ஸின் மீட்புக் கப்பல் விண்கலத்தை அடைந்தது.
மீட்புக் குழுவினர் நான்கு விண்வெளி வீரர்களையும் பத்திரமாக மீட்டு, உடனடி மருத்துவ பரிசோதனைகளுக்காக அழைத்துச் சென்றனர்.
இதையடுத்து, அவர்கள் வாண்டன்பெர்க் விண்வெளிப் படை தளத்திற்கு மாற்றப்பட்டு, மறுவாழ்வு நடவடிக்கைகளை தொடங்குவார்கள்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |