அப்பாவி மக்களுடன் சூடானில் இருந்து வெளியேறிய விமானம் மீது தாக்குதல்: மீட்பு நடவடிக்கைகள் தொடர்வதில் சிக்கல்
சூடானில் இருந்து அப்பாவி மக்களுடன் வெளியேறிய மீட்பு விமானம் மீது துணை ராணுவப்படை தாக்குதலை முன்னெடுத்த சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
தாக்குதலுக்கு இலக்கான விமானம்
குறித்த விமானத்தின் எரிபொருள் சேமிக்கும் பகுதியில் துளைத்த குண்டு ஊழியர் ஒருவரை காயப்படுத்தியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
Credit: Newspix
துருக்கியை சேர்ந்த C-130 ரக விமானமே சூடான் துணை ராணுவத்தினரால் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளது. அந்த விமானமானது பிரித்தானிய ராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள Wadi Sayedna விமான தளத்தில் தரையிறங்க நெருங்கிய நிலையிலேயே தாக்குதலுக்கு இலக்கானது என கூறுகின்றனர்.
ஆனால், உள்ளூர் நேரப்படி பகல் 7.25 மணியளவில் பாதுகாப்பாக தரையிறங்கியுள்ளது. தற்போது பராமரிப்பு பணிகள் முன்னெடுக்கப்படுவதாகவும், மக்களை வெளியேற்றும் பணிகள் தொடரும் என்றும் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, மனிதாபிமான அடிப்படையில் உலக நாடுகள் துணிந்து செயல்பட்டு வருவதை துணைராணுவத்தினர் மிக ஆபத்தான முறையில் சீர்குலைக்க பார்ப்பதாக சூடான் ராணுவம் குற்றஞ்சாட்டியுள்ளது.
Credit: Newspix
சூடான் போர் துவங்கிய பின்னர், வெளிநாட்டு மக்களை வெளியேற்றும் நடவடிக்கையின் போது விமானம் ஒன்று தாக்குதலுக்கு இலக்காவது இதுவே முதல்முறை என கூறப்படுகிறது.
மீட்பு நடவடிக்கைகளில் பெரும் சிக்கல்
இதனால், மீட்பு நடவடிக்கைகள் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியிருக்கிறது. இதுவரை 900 பிரித்தானியர்கள் மட்டுமே மீட்கப்பட்டுள்ள நிலையில், எஞ்சிய பிரித்தானிய மக்கள் மீட்கப்படுவார்களா என்ற கேள்வியும் இந்த சூழலில் எழுந்துள்ளது.
சூடான் தெருக்களில் இலக்கு வைத்து சுடும் துப்பாக்கி வீரர்கள் களமிறக்கப்பட்டுள்ளதாகவும், கடுமையான எரிபொருள் பற்றாக்குறை இருப்பதால் மீட்பு நடவடிக்கைகளை முன்னெடுப்பதில் பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
Credit: Newspix
தற்போது சூடானின் கார்டூமில் இருந்து சைப்ரஸ் நாட்டுக்கு மக்களை இடைவிடாத சேவை மூலமாக மீட்டு வருகின்றனர். பிரித்தானிய சிறப்பு படைகள் தற்போது பாதுகாப்பு நடவடிக்கைகளை கவனித்து வருகின்றனர்.
சுமார் 1,400 பிரித்தானிய ராணுவத்தினர் மீட்பு நடபடிக்கைகளில் களமிறக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Credit: UK MOD Crown copyright