தடுப்பூசி ஏற்றுமதியில் இந்தியா எடுத்த திடீர் முடிவு! பாதிக்கப்படவுள்ள 190 நாடுகள்
ஆக்ஸ்போர்டு-அஸ்ட்ராஜெனெகா கொரோனா வைரஸ் தடுப்பூசியின் அனைத்து ஏற்றுமதியையும் இந்தியா தற்காலிகமாக நிறுத்தியுள்ளதாக வெளியுறவு அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இந்தியாவில் கொரோனா பாதிப்புகள் மீண்டும் அதிகரித்துவருகிறது. கடந்த 24 மணிநேரத்தில் 47,000க்கும் அதிகமானவர்கள் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர், 275 பேர் இறந்துள்ளனர்.
இதனால் இந்தியாவில் வரும் வாரங்களில் தடுப்பூசிக்கான உள்நாட்டு தேவை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
எனவே, இந்தியா அதன் சொந்த மக்களுக்கு விரைவில் அதிகமான தடுப்பூசிகளை வழங்க திட்டமிட்டுள்ளது.
அதற்கான தேவையை பூர்த்தி செய்ய மற்ற நாடுகளுக்கு தடுப்பூசிகளை ஏற்றுமதி செய்வதை தற்காலிகமாக நிறுத்த முடிவெடுத்துள்ளது.
உலகின் மிகப்பெரிய தடுப்பூசி உற்பத்தியாளரான சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா (SII), ஏற்கனவே பிரித்தானியா, பிரேசில், சவுதி அரேபியா மற்றும் மொராக்கோ ஆகிய நாடுகளுக்கு அனுப்பவேண்டிய மில்லியன் கணக்கான அஸ்ட்ராஜெனேகா டோஸ்களை நிறுத்திவைத்துள்ளது.
இந்த தற்காலிக ஏற்றுமதி நிறுத்தம் ஏப்ரல் இறுதிவரை நீடிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவின் இந்த எதிர்பாராத முடிவால், உலக சுகாதார மைய்யத்தின் Covax திட்டத்தின் கிழ் பயனடைந்துவரும் 190 ஏழை மற்றும் வளரும் நாடுகள் பாதிக்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது.
இந்தியா இதுவரை 76 நாடுகளுக்கு 60 மில்லியனுக்கும் அதிகமான தடுப்பூசி டோஸ்களை ஏற்றுமதி செய்துள்ளது, இவற்றில் பெரும்பாலானவை ஆக்ஸ்போர்டு-அஸ்ட்ராஜெனேகா தடுப்பு மருந்து என்பது குறிப்பிடத்தக்கது.

