மியான்மரில் திடீர் நிலச்சரிவு - புதைந்த 100 பேரை காணவில்லை!
வடக்கு மியான்மரில் உள்ள பச்சை மாணிக்க கற்களை வெட்டியெடுக்கும் சுரங்கத்தில் இன்று ஏற்பட்ட திடீர் நிலச்சரிவில் சிக்கி ஒருவர் உயிரிழந்தாகவும் மேலும் 100 பேர் வரை மாயமாகி உள்ளதாகவும் தகவல் வெளிவந்துள்ளது.
கச்சின் மாகணத்தில் உள்ள ஹகந்த் பகுதியில் பச்சைக் கற்கள் வெட்டி எடுக்கும் அந்த சுரங்கம் அமைந்துள்ளது.
இங்கு வழக்கம் போல் நூற்றுக்கும் மேலான தொழிலாளர்கள் சுரங்கப் பணியில் ஈடுபட்டிருந்த வேளையில் இந்திய நேரப்படி இன்று காலை 4 மணியளவில் திடீரென மண் சரிந்து விழுந்து சுரங்கத்தை மூடியுள்ளது. இதில் 100 பேர் வரை சிக்கியிருக்கலாம் என சொல்லப்படுகிறது.
சம்பவமறிந்து வந்த மீட்புப் படையினர் விரைந்து வந்து மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதுவரை கிடைத்த தகவல்களின்படி ஒருவர் உயிரிழந்தாகவும் படுகாயங்களுடன் 25 பேரை மீட்டு, மருத்துவமனையில் சேர்த்துள்ளதாகவும் மீட்புப் படையினர் தெரிவித்துள்ளனர்.
ஆனால் அங்குள்ள செய்தி நிறுவனங்கள் இதுவரை நிலச்சரிவில் சிக்கி 20 பேர் உயிரிழந்துவிட்டனர் என்று செய்தி வெளியிட்டுள்ளன. 80 பேர் வரை அருகில் உள்ள ஏரியில் மூழ்கியிருக்கலாம் என்றும் தெரிவித்துள்ளன.
இதனை தொடர்ந்து சுரங்கத்துக்கு அருகே இருக்கும் ஏரியில் படகு மூலம் மீட்பு நடவடிக்கை நடந்து வருவதாகவும் கூறப்படுகின்றன.