செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலம் கரும்பு விவசாயம்.., அசத்தும் விவசாயிகள்
இந்திய மாநிலம் ஒன்றில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப உதவியுடன் விவசாயிகள் கரும்பு விவசாயத்தை மேற்கொண்டுள்ளனர்.
கரும்பு விவசாயம்
பொதுவாக மழை, பூச்சிகள் மற்றும் நோய்கள் அனைத்தும் பயிர்களை அழிப்பதால் விவசாயிகள் கவலை அடைவர். அதோடு, காலநிலை மாற்றம் மற்றும் கணிக்க முடியாத தன்மையால் விவசாயிகளுக்கு இன்னும் சிரமம் தான் ஏற்படுகிறது.
ஆனால், தற்போது நவீன விவசாய முறைகள் கணிக்க முடியாத தன்மையை ஓரளவிற்கு சரிசெய்ய உதவுகிறது. அந்தவகையில், செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) மூலம் விவசாயிகள் கரும்பு விவசாயத்தை மேற்கொண்டுள்ளனர்.
இந்த சோதனை, இந்தியாவின் மிகப்பெரிய கரும்பு உற்பத்தியாளர்களில் ஒன்றான மகாராஷ்டிராவில் நடத்தப்படுகிறது.
இந்திய மாநிலமான மகாராஷ்டிரா, பாராமதி தொகுதியில் இருக்கும் நிம்புட் கிராமதைச் சேர்ந்த விவசாயி சுரேஷ் ஜெகதாப் (65). இவர்களின் குடும்பம் பல தலைமுறைகளாக விவசாயம் செய்து, காய்கறிகள் மற்றும் பழங்களை உற்பத்தி செய்து வருகிறது.
இந்நிலையில், இங்குள்ள வேளாண் மேம்பாட்டு அறக்கட்டளையில் உள்ள விஞ்ஞானிகள் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி கரும்பு விவசாயிகளுக்கு தேவையான தகவலை அளித்து வருகின்றனர்.
ஏஐ தொழில்நுட்ப உதவியுடன் மேற்கொள்ளப்படும் கரும்பு விவசாயத்தில் சுரேஷ் ஜெகதாப் இணைந்துள்ளார்.
தற்போது இவரது நிலமே ஒரு வானிலை நிலையம் போல உள்ளது. அங்கு, உயரமான கோபுரம் அமைக்கப்பட்டுள்ளது.
இதில் உள்ள சென்சார்கள் காற்று, மழை சூரிய ஒளி, வெப்பம், ஈரப்பதம் ஆகியவற்றை அளவிடுகின்றன. அதேபோல மண்ணுக்கு அடியில் உள்ள சென்சார்கள் ஈரப்பதம், pH (அமிலத்தன்மை அல்லது காரத்தன்மை), மின் கடத்துத்திறன் மற்றும் பொட்டாசியம் போன்ற ஊட்டச்சத்துக்களை அளவிடுகின்றன.
இவற்றின் தரவுகள் செயற்கைக்கோள் மற்றும் ட்ரோன் படங்களுடனும் வரலாற்றுத் தரவுகளுடனும் இணைக்கப்படடுகின்றன. பின்னர் இந்த தகவல்கள் மொபைல் செயலி மூலம் விவசாயிகளுக்கு அனுப்பப்படுகின்றன.
அதாவது, அதிக தண்ணீர் பாய்ச்சுவது, உரம் போடுவது, பூச்சிகள் தாக்கத்தை பரிசோதனை செய்வது போன்ற தகவல்கள் அனுப்பப்படுகின்றன. இதனை பின்பற்றுவதால் விவசாயிகள் நிலத்தில் கரும்பு நன்றாக வளர்கிறது.
கரும்பின் தோகைகள் பசுமையாக வளர்வதுடன் உயரமாகவும் தடிமனாகவும் உள்ளது. இதனை ஒக்டோபர் அல்லது நவம்பரில் அறுவடை செய்யவுள்ளனர்.
ஏற்கனவே நடத்தப்பட்ட சோதனையில் அறுவடையின் போது கரும்புகள் 30 முதல் 40 சதவீதம் அதிக எடையும், 20 சதவீதம் சுக்ரோஸ் அளவு அதிகரிக்கிறது.
இதனால், நிலத்திற்கு குறைவான நீர் மற்றும் உரம் தேவைப்பட்டது. மேலும் பயிர் சுழற்சி குறுகியதாக இருந்தது. வழக்கமான 18 மாதங்கள் இருந்த நிலையில் 12 மாதங்களாக குறைந்துள்ளது.
இந்த திட்டத்தில் சுமார் 20,000 விவசாயிகள் இணைந்துள்ளனர். 1,000 பேர் முதல் சோதனைக்கு தேர்வு செய்யப்பட்டனர். இவர்கள் தற்போது கரும்பு விவசாயத்தில் கவனம் செலுத்துகின்றனர். இதில், 200 பேர் கரும்பு விவசாயத்தை 6 மாதங்களுக்கு முன்பே தொடங்கிவிட்டனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |