ரூ.1094 கோடிக்கு புதிய கிரிக்கெட் அணி: காவ்யா மாறனின் அடுத்த அதிரடி
சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் உரிமையாளரான காவ்யா மாறன் புதிய கிரிக்கெட் அணி ஒன்றை வாங்கியுள்ளார்.
காவ்யா மாறன்
கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் காவ்யா மாறன் பிரபலமாக அறியப்படுகிறார்.
அவர் ஐ.பி.எல் டி-20 தொடரில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் தலைமை நிர்வாக அதிகாரி (சி.இ.ஓ) ஆவார்.
ஐ.பி.எல் மட்டுமின்றி, தென் ஆப்ரிக்காவில் நடைபெறும் S.A 20 தொடரில் சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணியையும் அவர் நிர்வகித்து வருகிறார்.
காவ்யா மாறனின் தலைமையின் கீழ், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி ஒருமுறை (2016) சாம்பியன் பட்டத்தையும், சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணி இரண்டு முறை (2023, 2024) சாம்பியன் பட்டத்தையும் வென்றுள்ளன.
மேலும், ஐதராபாத் அணி இரண்டு முறை (2018, 2024) இறுதிப் போட்டி வரை சென்றுள்ளது.
புதிய அணி வாங்கிய சன் குழுமம்
இந்நிலையில், காவ்யா மாறன் மற்றும் சன் குழுமம் இணைந்து 1094 கோடி ரூபாய்க்கு மற்றொரு கிரிக்கெட் அணியை வாங்கியுள்ளனர்.
இங்கிலாந்தில் நடைபெறும் 'தி ஹன்ட்ரட்' போட்டியில் பங்கேற்கும் நார்தர்ன் சூப்பர் சார்ஜர்ஸ் அணியின் 100% பங்குகளை அவர்கள் கைப்பற்றியுள்ளனர்.
இதன் மூலம், 'தி ஹன்ட்ரட்' போட்டியில் ஒரு அணியை வாங்கும் மூன்றாவது ஐ.பி.எல் அணி என்ற பெருமையை சன்ரைசர்ஸ் ஐதராபாத் பெற்றுள்ளது.
மற்ற இரண்டு அணிகள் சில பங்குகளை மட்டுமே வாங்கிய நிலையில், சன்ரைசர்ஸ் ஐதராபாத் முழுமையாக அணியை வாங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
மும்பை இந்தியன்ஸ் அணி ஓவல் இன்வின்சிபிள்ஸின் 49% பங்குகளையும், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மான்செஸ்டர் ஒரிஜினல்ஸின் 70% பங்குகளையும் வாங்கியுள்ளன.
சன் குழுமம் கடந்த 2012 ஆம் ஆண்டு பி.சி.சி.ஐ-யிடம் இருந்து சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியை 85 கோடி ரூபாய்க்கு வாங்கியது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |