நுபுர் சர்மாவின் வார்த்தைகள் தேசத்தையே தீக்கிரையாக்கி விட்டது! மன்னிப்பு கேட்க வேண்டும் என நீதிமன்றம் கடும் கண்டனம்
முகமது நபிகள் குறித்து சர்ச்சையாக பேசிய பாஜக செய்தித் தொடர்பாளர் நுபுர் சர்மாவை உச்ச நீதிமன்றம் கண்டித்துள்ளது.
கடந்த மாதம் பாஜக செய்தித் தொடர்பாளர் நுபுர் சர்மா, தனியார் தொலைக்காட்சியின் விவாத நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். அப்போது, அவர் கியான்வாபி மசூதி தொடர்பான விவாதத்தின்போது முகமது நபிகள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியது உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமிய நாடுகளுக்கு கோபத்தை ஏற்படுத்தியது.
மேலும் இந்தியாவின் பல இடங்களில் போராட்டங்கள், கலவரங்கள் வெடித்தன. நுபுர் சர்மாவின் பேச்சுக்கு பல்வேறு தரப்பிலிருந்தும் கண்டனங்கள் குவிந்தன. அதனால், அந்தக் கட்சியின் தலைமை செய்தித் தொடர்பாளர் நுபுர் சர்மாவை கட்சியிலிருந்து இடைநீக்கம் செய்து நடவடிக்கை எடுத்தது.
அதன் பின்னர் நுபுர் சர்மா நேரில் ஆஜராகி நபிகள் குறித்த சர்ச்சைப் பேச்சு குறித்து விளக்கமளிக்க வேண்டும் என்று டெல்லி பொலிசார் சம்மன் அனுப்பினர். தனக்கு எதிராக தொடரப்பட்டுள்ள வழக்குகளை டெல்லி மாற்ற வேண்டும் என நுபுர் சர்மா உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். பல கொலை மிரட்டல்கள் வருவதாகவும், வெளிமாநிலங்களில் தனக்கு பாதுகாப்பு இருக்காது எனவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
இந்த நிலையில், உச்சநீதிமன்றத்தில் நுபுர் சர்மா வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது நுபுர் சர்மாவின் வழக்கறிஞரும் மனுதாக்கல் செய்த விடயத்தை கூறியுள்ளார். இதனால் கோபமடைந்த நீதிபதிகள், நுபுர் சர்மாவும் அவரது வார்த்தைகளும் ஒட்டுமொத்த நாட்டையும் தீக்கிரையாக்கி விட்டது. ஒரு தேசம் பற்றி எரிய அவர் தான் காரணம்.
நாங்கள் தொலைக்காட்சியில் நுபுர் சர்மா பேசியதை பார்த்தோம். அதில் நுபுர் சர்மா நடந்துகொண்ட விதம் அதன்பிறகு அவரது வழக்கறிஞர்கள் சொல்வது எல்லாம் வெட்கக்கேடானது. அவர் தனது கருத்துக்கு மன்னிப்பு கேட்டது எல்லாம் கால தாமதமானது. நுபுர் சர்மா ஒட்டுமொத்த தேசத்திடமும் மன்னிப்பு கேட்க வேண்டும் என கடுமையாக கண்டனங்களை தெரிவித்தனர்.
மேலும், தன் மீதான வழக்குகளை விசாரிக்க டெல்லிக்கு மாற்ற வேண்டும் என்ற நுபுர் சர்மாவின் கோரிக்கையை நீதிமன்றம் நிராகரித்து விட்டது. இதனால் அவர் இனி நாடு முழுவதும் உள்ள வழக்குகளை எதிர்கொள்ள வேண்டிய நிலையில் உள்ளார்.