அரசு வாகனம் வராததால் ஆட்டோவில் சென்ற சுரேஷ் கோபி.., பாஜக கடும் குற்றச்சாட்டு
கேரளாவில் பாஜக எம்பியான சுரேஷ் கோபி, அரசு வாகனம் வராததால் ஆட்டோவில் சென்ற சம்பவம் நடந்துள்ளது.
ஆட்டோவில் சென்ற சுரேஷ் கோபி
நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் கேரளாவில், பாஜக சார்பில் போட்டியிட்ட நடிகர் சுரேஷ் கோபி வெற்றி பெற்று எம்பியானார். பின்னர், இவருக்கு மத்திய சுற்றுலா மற்றும் பெட்ரோலியம்-இயற்கை எரிவாயு துறை இணை அமைச்சர் பதவி வழங்கப்பட்டது.
இந்நிலையில், மத்திய அமைச்சர் என்ற முறையில் கேரளாவில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் சுரேஷ் கோபி கலந்து கொள்கிறார்.
அந்தவகையில் நேற்று, ஆலப்புழா மாவட்டம் ஹரி பாட் நாகராஜா கோவிலில் நடந்த பூஜையில் மத்திய அமைச்சர் சுரேஷ்கோபி பங்கேற்றார்.
பின்னர், நிகழ்ச்சியை முடித்து வெளியே வந்ததும் அவரை அழைத்துச் செல்லும் அதிகாரபூர்வ வாகனம் வரவில்லை. அதேபோல காவல் துறையின் பைலட் வாகனமும் வரவில்லை.
இதையடுத்து, சிறிது நேரம் காத்துக் கொண்டிருந்த சுரேஷ் கோபி ஆட்டோவில் ஏறிச் சென்றார். இதனையறிந்த பைலட் மற்றும் அமைச்சரின் அதிகாரப்பூர்வ வாகனம், அவர் சென்ற வழியில் பின்தொடர்ந்து சென்றன.
பின்னர், சிறிது தூரம் சென்ற பிறகு அதிகாரப்பூர்வ வாகனத்தில் சுரேஷ் கோபி பயணித்தார். காவல்துறையின் அலட்சியம் மற்றும் பாதுகாப்பு குறைபாட்டால் தான் சுரேஷ் கோபி ஆட்டோவில் சென்றார் என்று பாஜக குற்றம் சாட்டி வருகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |