அமெரிக்காவில் வேகமெடுக்கும் Omicron பரவல்... வெளியான மாகாணங்களின் பட்டியல்
கொரோனா தொற்றின் புதிய மாறுபாடான Omicron வைரஸ் அமெரிக்காவின் மூன்றில் ஒருபகுதி மாகாணங்களில் பரவியுள்ளதாக சுகாதாரத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்கள் இதனால் அச்சப்பட தேவை இல்லை எனவும், தீவிர நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இந்த நிலையில், சர்ஜன் ஜெனரல் டாக்டர். விவேக் மூர்த்தி, புதிய மாறுபாட்டின் பரவலைக் கட்டுப்படுத்த உதவுமாறு அமெரிக்கர்களிடம் வேண்டுகோள் விடுத்தார்,
இருப்பினும் பொதுமக்கள் புதிய மாறுபாடு தொடர்பில் பயப்பட வேண்டாம் எனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார். மக்கள் கவனமுடன் இருந்தாலே புதிய மாறுபாடை எதிர்கொள்ள முடியும் என குறிப்பிட்டுள்ள டாக்டர். விவேக் மூர்த்தி, கடந்த ஆண்டில் முன்னெடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றவும் கோரிக்கை விடுத்தார்.
இதுவரை நாட்டின் 15 மாகாணங்களில் ஓமிக்ரான் தொற்று கண்டறியப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கலிபோர்னியா, கொலராடோ, கனெக்டிகட், ஹவாய், மேரிலாந்து, மாசசூசெட்ஸ், மினசோட்டா, மிசோரி, நெப்ராஸ்கா, நியூ ஜெர்சி, நியூயார்க், பென்சில்வேனியா, உட்டா, வாஷிங்டன் மற்றும் விஸ்கான்சின் ஆகிய மாகாணங்கள் என பட்டியலிட்டுள்ளனர்.
இதனிடையே, ஓமிக்ரான் தொற்றானது தென்னாபிரிக்காவில் மருத்துவமனையை நாடுபவர்கள் எண்ணிக்கையை அதிகரிக்கவோ அல்லது மரண எண்ணிக்கையில் அதிகரிப்பையோ ஏற்படுத்தவில்லை என அந்த நாட்டின் சுகாதாரத்துறை அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், இறுதியான ஒரு முடிவை எட்ட இன்னும் கால அவகாசம் இருப்பதாகவே நிபுணர்கள் தரப்பு சுட்டிக்காட்டியுள்ளது. ஓமிக்ரான் தொற்று கண்டறியப்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் முழுமையாக தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் எனவும், அவர்கள் பூஸ்டர் தடுப்பூசி போட்டுக்கொண்டார்களா என்பது உறுதி செய்யப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஓமிக்ரான் தொற்று தீவிரமாக பரவி வந்தாலும், அமெரிக்காவில் நாள்தோறும் பாதிக்கப்படும் கொரோனா நோயாளிகளில் 99.9 சதவீதம் பேர்களில் இந்தியாவில் அடையாளம் காணப்பட்ட வீரியம் மிகுந்த டெல்டா மாறுபாடே காணப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.