சொந்த பிள்ளைகள் உட்பட 9 பேரைக் கொன்ற நபரின் முடிவு
தென் அமெரிக்காவில், தன் பிள்ளைகள் உட்பட 9 பேரைக் கொலை செய்ததாக கைது செய்யப்பட்ட நபர் ஒருவர், பொலிஸ் காவலில் தன் உயிரைத் தானே மாய்த்துக்கொண்டார்.
9 பேரைக் கொன்ற நபர்
தென் அமெரிக்க நாடான Suriname என்னும் நாட்டில், தன் நான்கு பிள்ளைகள் உட்பட 9 பேரைக் கொன்றதாக ஒருவர் கைது செய்யப்பட்டு பொலிஸ் காவலில் வைக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில், அந்த 43 வயது நபர், நேற்று, திங்கட்கிழமையன்று, தன் உயிரைத் தானே மாய்த்துக்கொண்டார்.
Richelieu என்னும் கிராமத்தில் வாழ்ந்து வந்த அந்த நபர், சனிக்கிழமை நள்ளிரவில் தன் பிள்ளைகள், அவர்களுடைய தாத்தா பாட்டி, பக்கத்து வீட்டுப் பிள்ளை ஒன்று உட்பட பலரை சரமாரியாக கத்தியால் குத்தியுள்ளார்.

அந்த தாக்குதலில் அவரது பிள்ளைகள் உட்பட 9 பேர் உயிரிழந்துள்ளனர். ஒரு சிறுபிள்ளை உட்பட நான்கு பேர் காயமடைந்துள்ளனர்.
அவர்களில் அந்த சிறுபிள்ளை மற்றும் ஒரு பெரியவரின் உடல் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தன் முன்னாள் மனைவியுடன் மொபைலில் ஏதோ வாக்குவாதத்தில் ஈடுபட்டதைத் தொடர்ந்து அந்த நபர் தன் பிள்ளைகளை தாக்கத் துவங்கியுள்ளார்.
அவரது பிள்ளைகளில் இருவர் தப்பியோடி அக்கம் பக்கத்து வீட்டுகாரர்களுக்கு தகவல் கொடுத்ததால் உயிர் தப்பியுள்ளனர்.
ஆனால், அவர்களுக்கு உதவிக்கு வந்த உறவினர்கள் சிலரையும் அவர் கத்தியால் தாக்கிக் கொன்றுள்ளார்.
அவரைக் கைது செய்ய வந்த பொலிசாரையும் அவர் தாக்க முயன்றதால், துப்பாக்கியால் அவரது காலில் சுட்டுத்தான் பொலிசார் அவரைப் பிடித்துள்ளனர்.
ஆனால், சிகிச்சைக்குப் பின் அவர் காவலில் அடைக்கப்பட்டிருந்த நிலையில், சிறையில் தூக்கிட்டு தன் உயிரைத் தானே மாய்த்துக்கொண்டதாகவும், உயிரற்ற நிலையில் அவர் கண்டுபிடிக்கப்பட்டதாகவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |