உக்ரைன் நகர காட்டுமிராண்டித்தனத்திற்கு இவர்தான் பொறுப்பு: வெளியான ரஷ்ய தளபதியின் புகைப்படம்
உக்ரைனின் புச்சா நகரில் அரங்கேறிய கொடூரத்திற்கு காரணமானவர் என கூறப்படும் ரஷ்ய தளபதியின் பெயர் மற்றும் புகைப்படம் வெளியாகியுள்ளது.
புச்சா நகரம் மொத்தமாக சேதப்படுத்தப்பட்டுள்ளதுடன், அப்பாவி பொதுமக்கள் மீதும் கொடூர தாக்குதல் முன்னெடுக்கப்பட்டுள்ளது. கண்டெடுக்கப்பட்ட சடலங்கள் அனைத்தும் கொடூர சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளது அம்பலமானதுடன், சடலங்களில் வெடிகுண்டு வைத்துவிட்டு ரஷ்ய துருப்புகள் வெளியேறியுள்ளது.
இச்சம்பவம் வெளியாகி உலக நாடுகளில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்த காட்டுமிராண்டித்தனத்திற்கு ரஷ்ய தளபதி Azatbek Omurbekov என்பவரே பொறுப்பு என அம்பலமாகியுள்ளது.
திங்களன்று புச்சா நகருக்கு சென்றுள்ள ஜனாதிபதி ஜெலென்ஸ்கி, நடந்த கொடூரங்களை கண்டு கண்கலங்கியுள்ளார். பெண்கள், சிறார்கள் என அனைவரும் சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளது ஆதாரங்களாக சிக்கியுள்ளது.
இந்த நிலைக்கு உள்ளாக்கிய தளபதியை பழி தீர்ப்போம் என சூளுரைத்துள்ளனர் உக்ரைன் அதிகாரிகள். இதனிடையே, உக்ரைன் விவகாரத்தில் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் போர் குற்ற விசாரணையை எதிர்கொள்ள வேண்டும் என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் காட்டமாக விமர்சித்துள்ளார்.
தலைநகர் கீவ்வை கைப்பற்ற முடியாமல் போகவே, ரஷ்ய துருப்புகள் புச்சா நகரம் மீது தங்கள் ஆத்திரத்தை தீர்த்துள்ளது. மேலும், கீவ் நகரில் இருந்து படைகளை விலக்கிக்கொண்டுள்ள விளாடிமிர் புடின் தற்போது தென் கிழக்கில் துருப்புகளை குவித்து வருவதாக ஜெலென்ஸ்கி குற்றஞ்சாட்டியுள்ளார்.
உக்ரைன் மண்ணில் விளாடிமிர் புடினின் ரஷ்ய துருப்புகள் இன அழிப்பை முன்னெடுத்துள்ளதாக குற்றஞ்சாட்டியுள்ள ஜெலென்ஸ்கி, அனைத்து ஆதாரங்களையும் பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் சர்வதேச சமூகத்திற்கு முன் ஒப்படைப்பேன் என தெரிவித்துள்ளார்.
உக்ரைனுக்கு தேவை ஆயுத உதவிகள் மட்டுமே. ரஷ்யாவின் பிடியில் உள்ள உக்ரைன் நகரங்களை மீட்க வேண்டும் என ஜெலென்ஸ்கி குறிப்பிட்டுள்ளார்.
மேலும், உக்ரைனை கொள்ளையிட்டவர்கள், கொலைகாரர்கள், துஸ்பிரயோகத்தில் ஈடுபட்டவர்கள் என அனைவரையும் பெயர் முகவரியுடன் அம்பலப்படுத்தும் நாள் மிகத் தொலைவில் இல்லை என உக்ரைன் அதிகாரிகள் தரப்பு ஆவேசமாக தெரிவித்துள்ளது.