கதிரியக்க சுனாமியால் நகரங்களை அழிக்கும் ஆயுதம்... சோதனை வெற்றி என புடின் அறிவிப்பு
போஸிடான் என்ற அணுசக்தியால் இயக்கப்படும் டார்பிடோ-ட்ரோனை ரஷ்யா வெற்றிகரமாக சோதித்ததாக விளாடிமிர் புடின் தெரிவித்துள்ளார்.
பழிவாங்கும் ஆயுதம்
கதிரியக்க இயந்திரத்தைப் பயன்படுத்தும் ஆயுதம் குறித்த ரஷ்யாவின் இரண்டாவது அறிவிப்பு இது. அமெரிக்க மற்றும் ரஷ்ய அதிகாரிகள் இரு தரப்பும் போஸிடானை ஒரு புதிய வகை பழிவாங்கும் ஆயுதம் என்றே குறிப்பிட்டுள்ளனர்.

அதில் பொருத்தப்பட்டிருக்கும் அணு ஆயுதமானது கடலோர நகரங்களை வாழத் தகுதியற்றதாக மாற்றும் வகையில் கதிரியக்க சுனாமியைத் தூண்டும் திறன் கொண்டது.
ஆனால், இந்த ஆயுதமானது பாரம்பரியமாக பின்பற்றப்படும் அணுசக்தி தடுப்பு மற்றும் வகைப்பாடு விதிகளில் பெரும்பாலானவற்றை உடைப்பதாக ஆயுதக் கட்டுப்பாட்டு நிபுணர்கள் கூறுகின்றனர்.
உண்மையில் இது ஒரு டார்பிடோ போன்ற நீர்மூழ்கிக் கப்பலில் இருந்து ஏவப்படுகிறது, ஆனால் அதன் அணு ஆயுதத்தால் தாக்குவதற்கு முன்பு நீருக்கடியில் ட்ரோனாக சுற்றித் திரியும் திறன் கொண்டதாகக் கூறப்படுகிறது.
போஸிடான் சோதனை மிகப்பெரிய வெற்றி என குறிப்பிட்டுள்ள புடின், போஸிடானின் சக்தி ரஷ்யாவின் சர்மாட் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை விட அதிகமாக இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.

அதிக எண்ணிக்கை
இதனிடையே, கடந்த 30 ஆண்டுகளில் முதல் முறையாக அணு ஆயுத சோதனைகளை முன்னெடுக்க அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் தமது இராணுவ அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
ரஷ்யா மற்றும் சீனா போன்ற பிற நாடுகளுக்கு இணையான வேகத்தில் அமெரிக்கா பயணிக்க வேண்டும் என்றும் ட்ரம்ப் சுட்டிக்காட்டியுள்ளார். வேறு எந்த நாட்டையும் விட அமெரிக்காவிடம் அதிக எண்ணிக்கையிலான அணு ஆயுதங்கள் உள்ளன என்று குறிப்பிட்ட ட்ரம்ப்,

கடந்த 1992 முதல் அணு ஆயுத சோதனைகளை அமெரிக்கா நடத்தவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார். வரம்பற்ற தூரம் சென்று தாக்கக்கூடிய அணுசக்தி ஏவுகணையை ரஷ்யா சோதித்ததாக ட்ரம்ப் கண்டனம் தெரிவித்த சில நாட்களுக்குப் பிறகு, அமெரிக்காவும் அணு ஆயுத சோதனைகளை முன்னெடுக்க வேண்டும் என ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |