மோடியின் ஸ்வீடன் பயணம் - இஸ்ரோவின் வெள்ளி திட்டத்தில் ஒத்துழைப்பு
இஸ்ரோவின் வெள்ளி கோளை ஆய்வு செய்யும் திட்டத்தில் ஸ்வீடனும் தனது பங்களிப்பை வழங்க உள்ளது.
மோடியின் ஸ்வீடன் பயணம்
இந்திய பிரதமர் மோடி 5 நாடுகளுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார். ஐக்கிய அரபு அமீரகம், நெதர்லாந்து ஆகிய நாடுகளுக்கு சென்று விட்டு, நேற்று ஸ்வீடனுக்கு சென்றார்.

அங்கு அவருக்கு ஸ்வீடன் நாட்டின் உயரிய விருதான ‘ராயல் ஆர்டர் ஆப் போலார் ஸ்டார், கமாண்டர் கிராண்ட் கிராஸ்’ விருதை ஸ்வீடன் இளவரசி விக்டோரியா வழங்கி கௌரவித்தார்.

இது சர்வதேச அளவில் பிரதமர் மோடிக்கு கிடைத்த 31வது கௌரவ விருதாகும்.
இந்த பயணத்தில் இந்தியா மற்றும் ஸ்வீடன் பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளது.
இதில், வெள்ளி கோளை ஆய்வு செய்யும் இஸ்ரோவின் விண்வெளி திட்டத்தில் ஸ்வீடன் அரசும் கைகோர்த்துள்ளது.
இஸ்ரோவின் வெள்ளி திட்டம்
வெள்ளி கோளை ஆய்வு செய்யும் நோக்கில், 2028 ஆம் ஆண்டில் LVM-3 ராக்கெட் மூலம், வெள்ளியின் சுற்றுப்பாதைக்கு செல்லும் வகையில் விண்கலம் ஏவப்பட்ட உள்ளது.

இந்த திட்டம், இந்திய மற்றும் சர்வதேச கருவிகளை உள்ளடக்கிய மொத்தம் 19 கருவிகளைக் கொண்டுள்ளது. இதன் ஆரம்பகட்ட வடிவமைப்பு ஆய்வு கடந்த மாதம் நிறைவடைந்தது.
இதில், ஸ்வீடனின் பங்களிப்பாக ஸ்வீடன் விண்வெளி இயற்பியல் நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட வீனஸ் நடுநிலை அணுக்கள் பகுப்பாய்வுக் கருவி உள்ளது.
இது அக்கிரகத்தின் மேல் வளிமண்டலத்தில் உள்ள ஆற்றல்மிக்க நடுநிலை அணுக்களைப் பகுப்பாய்வு செய்யும்.
ஸ்வீடன் பெருமை கொள்கிறது
இது குறித்து பேசிய ஸ்வீடன் பிரதமர் உல்ஃப் கிறிஸ்டர்சன், “இந்தத் துறையில் இந்தியாவும் ஸ்வீடனும் மேம்பட்ட ஒத்துழைப்பைத் தொடர்வதற்குப் பெரும் வாய்ப்பு இருப்பதாக நான் காண்கிறேன்.
மேலும், வீனஸ் ஆர்பிட்டர் திட்டத்தின் ஒரு பகுதியாக இருக்கும் ஒரு கருவியில் இணைந்து செயல்படுவதற்காக நமது இரு விண்வெளி அமைப்புகளும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருப்பது எனக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. எனவே, இந்தியாவுடன் இணைந்து வீனஸ் நோக்கிய பயணத்தில் இருப்பதில் ஸ்வீடன் பெருமை கொள்கிறது” என தெரிவித்துள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |