நாட்டுக்கு அச்சுறுத்தல் என்றால் குடியுரிமை பறிக்கப்படும்... ஐரோப்பிய நாடொன்று திட்டம்
தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் குற்றங்களைச் செய்யும் இரட்டைக் குடியுரிமை பெற்றவர்கள் தங்கள் குடியுரிமையை இழக்க வேண்டும் என்று ஸ்வீடனின் அரசியல் கட்சிகள் ஒருமனதாக ஒப்புக் கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
வாக்கெடுப்பு முன்னெடுக்கப்படும்
குடியுரிமை பெற லஞ்சம் அல்லது தவறான தகவல்களைப் பயன்படுத்திய எவருக்கும் இந்த மாற்றம் பொருந்தும் என்றும் பல கட்சி உறுப்பினர்களைக் கொண்ட அந்த குழு பரிந்துரைத்துள்ளது.
மேலும் அவர்கள் அரசுக்கு அச்சுறுத்தலாக இருக்கும் குற்றங்களைச் செய்திருந்தால் அல்லது சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் அதிகார வரம்பிற்குள் வந்திருந்தாலும் மேற்கூறிய நடவடிக்கை பொருந்தும்.
ஸ்வீடனின் அரசியலமைப்பின் கீழ், குடியுரிமையை ரத்து செய்வது தற்போது அனுமதிக்கப்படவில்லை, மேலும் சட்டங்களை மாற்றுவது குறித்து அடுத்த ஆண்டு நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பு முன்னெடுக்கப்படும்.
இந்த நிலையில், குழுக்களாக செயல்படும் குற்றவாளிகளின் குடியுரிமையை ரத்து செய்வது மிகையான நடவடிக்கை என்று இடதுசாரி எதிர்க்கட்சிகள் வாதிட்டுள்ளன. மட்டுமின்றி, சட்டத்தை எவ்வாறு வரையறுப்பது என்பதை தீர்மானிப்பதும் கடினமாக இருக்கும் என குறிப்பிட்டுள்ளனர்.
இடதுசாரிகள் மற்றும் பசுமைக் கட்சிகள் ஆகிய இரண்டு எதிர்க்கட்சிகளும் குடியுரிமையை நீக்குவதை ஆதரிக்கவே முடியாது என்று கூறியுள்ளன. இருப்பினும் குழுக்களால் ஏற்படும் குற்றங்களின் அதிகரிப்பையும் துப்பாக்கி வன்முறைகளின் அதிக விகிதத்தையும் எதிர்கொள்ள மாற்றம் தேவை என்றே ஆளும் வலதுசாரி கட்சிகள் தெரிவித்துள்ளன.
எட்டு ஆண்டுகள்
டென்மார்க்கில் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் குற்றங்களைச் செய்வோரின் குடியுரிமை பறிக்கப்படுவதை ஸ்வீடன் அரசாங்கமும் சுட்டிக்காட்டியுள்ளது. அத்துடன் குடியுரிமைக்கு விண்ணப்பிப்பதில் விதிகளை கடுமையாக்க நடவடிக்கை எடுத்துள்ளது.
கடந்த ஆண்டு மட்டும் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாகக் கருதப்பட்ட 600 பேர்கள் குடியுரிமைக்கு விண்ணப்பித்ததாக காவல்துறையினர் புகார் அளித்தனர் என அமைச்சர் Johan Forssell தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் ஜூன் 2026 முதல், ஸ்வீடன் குடியுரிமைக்கு விண்ணப்பிக்கும் எவரும் தற்போது ஐந்து ஆண்டுகளுக்குப் பதிலாக எட்டு ஆண்டுகள் நாட்டில் வாழ்ந்திருக்க வேண்டும். அத்துடன் ஸ்வீடிஷ் மொழி மற்றும் சமூகம் குறித்த சோதனைகளும் முன்னெடுக்கப்படும் என்றே அமைச்சர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |