ஐரோப்பிய நாடொன்றை நடுங்கவைத்த சம்பவம்: 14 வயது சிறுவன் கைது
ஸ்வீடனில் பரபரப்பான தெரு ஒன்றில் 6 பேர்கள் துப்பாக்கியால் சுடப்பட்ட விவகாரத்தில் 14 வயது சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.
துப்பாக்கிச் சூடு
ஸ்வீடனின் Gävle பகுதியிலேயே நள்ளிரவு 2 மணிக்கு துப்பாக்கிச் சூடு சம்பவம் நடந்துள்ளது. குறித்த பகுதியானது மதுபான விடுதிகள், ஹொட்டல்கள் என பரபரப்பாக இயங்கும் இடமாகும்.
துப்பாக்கிச் சூடு சம்பவத்தை அடுத்து அப்பகுதி மொத்தம் அவசர உதவிக்குழுவினரால் நிரம்பியிருந்தது. சம்பவத்தை அடுத்து அப்பகுதியில் பொலிசார் குவிக்கப்பட்டதுடன், பாதிக்கப்பட்டவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கும் அனுப்பி வைக்கப்பட்டனர்.
கைதான 14 வயது சிறுவன் மீது விசாரணைக்கு பின்னர் கொலை முயற்சி வழக்குகள் பதியப்படும் என்றே கூறப்படுகிறது. துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான அனைவரும் இளம் வயதினர் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
கொலை முயற்சி
அவர்களின் நிலை தொடர்பில் உறுதியான தகவல் ஏதும் வெளியாகவில்லை என்றும், குறைந்தது மூவர் துப்பாக்கி குண்டு காயங்களுடன் ஹொட்டல் ஒன்றில் புகுந்து உயிர் தப்பியதாக கூறப்படுகிறது.
இதனையடுத்தே துப்பாக்கிச் சூடு சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தது. இந்த சம்பவம் குற்றவியல் குழுக்களுடன் தொடர்பிருப்பதாக உறுதி செய்ய முடியவில்லை என்றே பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த சம்பவம் கொலை முயற்சியாக விசாரிக்கப்படுகிறது எனவும் பொலிஸ் தரப்பில் தெரிவித்துள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |