சுவிஸ் ஆயுத ஏற்றுமதி மீண்டும் சரிவு... கட்டுப்பாடுகளை நீக்க எழுந்த கோரிக்கை
தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக, 2024 ஆம் ஆண்டிலும் ஏற்றுமதி சரிவடைந்ததால், சுவிஸ் ஆயுத ஏற்றுமதி நிறுவனங்கள் அதன் பொருட்களின் மறுவிற்பனை மீதான கட்டுப்பாடுகளைத் தளர்த்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளது.
சுவிஸ் ஆயுத ஏற்றுமதி
உக்ரைன் போர் தொடர்பில் அமெரிக்கா எடுத்துள்ள முடிவுகளால் ஐரோப்பா தனது பாதுகாப்பு செலவினங்களை அதிகரித்து வரும் நிலையில், சுவிஸ் ஆயுத ஏற்றுமதி பின்தங்கி வருவதாலையே இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சுவிஸ் ஆயுத ஏற்றுமதி நிர்வாகத்தின் முதன்மை பொறுப்பாளரான Matthias Zoller தெரிவிக்கையில், நடுநிலைமைச் சட்டங்கள் சுவிட்சர்லாந்தை முதன்மையான ஒப்பந்தங்களில் ஈடுபட முடியாமல் தடுத்து நிறுத்துவதாக குறிப்பிட்டுள்ளார்.
சுவிஸ் ஆயுதங்களை அதிகமாக வாங்கும் நாடான ஜேர்மனி, சில கொள்முதல் ஒப்பந்தங்களில் இருந்து சுவிஸ் நிறுவனங்களை விலக்கியுள்ளது. அதேவேளை டென்மார்க் மற்றும் நெதர்லாந்து ஆகிய நாடுகள் ஆர்டர்களை நிறுத்திவிட்டன என Zoller தெரிவித்துள்ளார்.
வெளியான தரவுகளின் அடிப்படையில், 2023 ஆம் ஆண்டில் 696.8 மில்லியன் பிராங்குகளாக இருந்த சுவிஸ் போர்ப் பொருட்களின் ஏற்றுமதி 5 சதவிகிதம் குறைந்து 665 மில்லியன் சுவிஸ் பிராங்குகளாக (754.74 மில்லியன் டொலர்) சரிவடைந்துள்ளது.
ஆனால் 2022ல் 955 மில்லியன் சுவிஸ் பிராங்குகளுக்கு நடந்த ஆயுத ஏற்றுமதியில் இருந்து 2023 ஆம் ஆண்டில் 27 சதவிகிதம் சரிவடைந்துள்ளது. ஐரோப்பிய நாடுகள் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக பெருந்தொகை செலவிட உள்ளனர். ஆனால் சுவிஸ் நிறுவனங்களுக்கு அது பேரிழப்பாக மாறப்போகிறது என Zoller தெரிவித்துள்ளார்.
சுவிட்சர்லாந்தில் அமுலில் இருக்கும் நடுநிலைமைச் சட்டங்கள் மற்றும் சுவிஸ் போர்ப் பொருட்கள் சட்டத்தின் கீழ், ஆயுத மோதலில் ஈடுபட்டுள்ள நாடுகளுக்கு நேரடியாக ஆயுதங்களை விற்க முடியாது.
பெரிதும் பாதிக்கிறது
அத்துடன், சுவிஸ் ஆயுதங்களைக் கொள்முதல் செய்துள்ள நாடும் அதை மீண்டும் ஏற்றுமதி செய்ய முடியாது. இதன் காரணமாகவே ஜேர்மனியில் இருந்து உக்ரைனுக்கு விமான எதிர்ப்பு அமைப்புகளை வழங்குவதுத் தடுக்கப்பட்டது.
அமுலில் உள்ளக் கட்டுப்பாடுகள் முற்றிலும் அபத்தமானவை என குறிப்பிட்டுள்ள அரசியல் பிரமுகர் ஒருவர், இது நமது தொழில்துறை மற்றும் நமது பாதுகாப்புத் திறனை மட்டுமல்ல, நடுநிலையாக இருந்து ஐரோப்பிய பாதுகாப்பிற்கான நமது பங்களிப்பையும் பெரிதும் பாதிக்கிறது என்றார்.
கட்டுப்பாடுகள் இருந்தபோதிலும், ஒரு குறிப்பிடத்தக்க ஆயுத ஏற்றுமதியாளராகவே சுவிட்சர்லாந்து இருந்து வருகிறது, வெடிமருந்துகள் மற்றும் கவச வாகனங்களில் நிபுணத்துவம் பெற்றுள்ளது.
இந்த நிலையில், அசாதாரண சூழ்நிலைகளில் அதன் கட்டுப்பாடுகளை தளர்த்தலாமா, அதே போல் மறு ஏற்றுமதி கட்டுப்பாட்டை அவை வழங்கப்பட்ட ஐந்து ஆண்டுகளுக்கு மட்டுப்படுத்தலாமா என்பது குறித்தும் சுவிஸ் அரசாங்கம் தற்போது ஆலோசித்து வருகிறது என்றே தகவல் வெளியாகியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |