தடுப்பூசி பெற்றுக்கொள்ளாத சுவிஸ் குடிமக்களுக்கு சிக்கல்?
சுவிட்சர்லாந்தில், கொரோனா தடுப்பூசி பெற்றுக்கொண்டவர்களுக்கு கூடுதல் சலுகைகள் வழங்கப்படவேண்டும் என்ற கோரிக்கை வலுத்துவரும் அதே நேரத்தில், இன்னமும் தடுப்பூசி பெற்றுக்கொள்ளாதவர்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கவேண்டும் என்றும் குரல்கள் ஒலிக்கத் துவங்கியுள்ளன.
இதனால், இதுவரை தடுப்பூசி பெற்றுக்கொள்ளாமல் காலம் தாழ்த்திவந்தவர்களுக்கு சிக்கல் ஏற்படக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சுவிட்சர்லாந்தில் தடுப்பூசி போட்டுக்கொள்பவர்களின் எண்ணிக்கை குறையத் தொடங்கியுள்ள அதே நேரத்தில், கொரோனா தொற்றுக்கு ஆளாகுவோரின் எண்ணிக்கை அதிகரிக்கத் துவங்கியுள்ளது. ஆகவே, மக்கள் அனைவரும் தடுப்பூசி பெற்றுக்கொள்ளவேண்டும் என்பதை வலியுறுத்தவேண்டும் என்ற ஒரு கருத்து உருவாகி வருகிறது.
லிபரல் கட்சியின் தலைவரான Jürg Grossen, திரைப்படங்களுக்கு செல்லுதல் போன்ற சுதந்திரத்தை அனுபவிக்க விரும்புவோர் கொரோனா சான்றிதழை காட்டவேண்டியது கட்டாயம் என்ற விதி கொண்டுவரப்படவேண்டும் என்று கூறியுள்ளார்.
அத்துடன், தேசிய ஆணையத்தின் சுகாதார பிரிவின் தலைவரான Ruth Humbelம், தடுப்பூசி பெற்றுக்கொண்டவர்களுக்கு மாஸ்க் அணிவதிலிருந்து விலக்கு அளிக்கப்படவேண்டும் என்று கூறியுள்ளார்.
மேலும், பெடரல் சுகாதார அலுவலகத்தின் தலைவரான Anne Lévyயும், எதிர்காலத்தில் மீண்டும் பொதுமுடக்கம் முதலான கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதைப் பார்க்கிலும், கொரோனா சான்றிதழ்கள் கட்டாயம் என்ற விதி எவ்வளவோ சிறந்தது என்று கூறியுள்ளார். ஆகவே, தடுப்பூசி பெற்றுக்கொள்ளாதவர்கள் இனி பிரச்சினைகளை சந்திக்க நேரிடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.