சுவிட்சர்லாந்தில் புதிய கட்டுப்பாடுகள்: நாய் கழிவுகளை சுத்தம் செய்யாவிட்டால் அபராதம்
சுவிட்சர்லாந்தின் கியாஸ்ஸோ(Chiasso) நகரில் நாய் வளர்ப்போருக்கான புதிய கட்டுப்பாடுகள் அமுல்படுத்தப்பட்டுள்ளது.
நாய் கழிவுகளை சுத்தம் செய்ய உத்தரவு
பொது இடங்கள் மற்றும் தெருக்களில் நாய்களின் கழிவு மற்றும் சிறுநீரால் ஏற்படும் துர்நாற்றத்தை கட்டுப்படுத்தும் நோக்கில் சுவிட்சர்லாந்தின் கியாஸ்ஸோ நகரம் புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது.
அதன்படி நாய் வளர்ப்பாளர்கள் இனி தங்கள் நாய்களை பொது இடங்களுக்கோ அல்லது தெருக்களுக்கோ அழைத்து செல்லும் போது கட்டாயம் கழிவு பையும், தண்ணீர் பாட்டிலும் வைத்திருக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

பொது இடங்களில் நாய்கள் சிறுநீர் கழித்தால் அதனை தண்ணீர் கொண்டு நீர்த்து போக செய்ய வேண்டும், மேலும் கழிவுகளை அதற்கான பைகள் மூலம் அப்புறப்படுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர் வறட்சி மற்றும் வெப்பம் காரணமாக நகரின் வீதிகளில் அதிக துர்நாற்றம் வீசுவதாக புகார்கள் எழுந்ததை தொடர்ந்து இத்தகைய முடிவு எடுக்கப்பட்டு இருப்பதாக நகராட்சி மேயர் புருனோ அரிகோனி காரணத்தை விளக்கியுள்ளார்,
மீறியவர்களுக்கு அபராதம்

இந்த புதிய உத்தரவை பின்பற்ற தவறியவர்களுக்கு முதலில் எச்சரிக்கை கொடுக்கப்படும்.
பின்னர் மீண்டும் இந்த தவறினை செய்தால் அவர்களுக்கு 100 சுவிஸ் பிராங்க் அபராதமாக விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இத்தாலி, ஸ்பெயின் போன்ற ஐரோப்பிய நாடுகளில் இத்தகைய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |