பிரான்சில் கண்டெடுக்கப்பட்ட சுவிஸ் நாட்டவரின் உடல்: பெண் கைது
பிரான்ஸ் நாட்டில், நதியொன்றின் கரையோரமாக, கூறுபோடப்பட்ட நிலையில் சுவிஸ் நாட்டவர் ஒருவரின் உடல் கண்டெடுக்கப்பட்ட விடயம் தொடர்பில் பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பிரான்சில் கண்டெடுக்கப்பட்ட உடல்
இம்மாதம், அதாவது, நவம்பர் மாதம் 1ஆம் திகதி, பிரான்சிலுள்ள Haute-Saône என்னுமிடத்தில், Saône நதிக்கரையோரமாக ஒரு ஆணின் உடல் கண்டெடுக்கப்பட்டது.

அவரது தலையும் உடலும் இரண்டிரண்டு துண்டுகளாக வெட்டப்பட்டிருந்த நிலையில், வெறும் உள்ளாடையுடன் இறந்து கிடந்த அந்த நபரின் உடலில் பல கத்திக்குத்துக் காயங்களும் காணப்பட்டன.
பொலிஸ் விசாரணையில், அது சுவிட்சர்லாந்தின் Vaud மாகாணத்திலுள்ள Sainte-Croix என்னுமிடத்தைச் சேர்ந்த ஒரு 75 வயது ஆணுடையது என்பது தெரியவந்தது.
அவர் அக்டோபர் மாதம் 31ஆம் திகதி காணாமல் போனதாக பொலிசில் புகாரளிக்கப்பட்டிருந்தது.
இரண்டு நாட்களுக்குப் பிறகு, தன் வீட்டுக்குத் தீவைத்ததாக சுவிட்சர்லாந்தில் வாழும் பிரான்ஸ் நாட்டுப் பெண்ணொருவரை சுவிஸ் பொலிசார் கைது செய்தனர்.
அந்த வீடு, உயிரிழந்து கூறுபோடப்பட்ட நிலையில் பிரான்சில் கண்டெடுக்கப்பட்ட நபருக்குச் சொந்தமானது என தெரியவரவே, அவரது வீட்டில் வாடகைக்கு இருந்த இந்த பிரான்ஸ் நாட்டவரான 35 வயதுப் பெண்ணின்மீது பொலிசாரின் சந்தேகம் திரும்பியது.
கையில் எக்கச்சக்கமாக பணத்துடன் பிரான்சுக்கு தப்பியோட முயன்ற நிலையில், அந்தப் பெண், பொலிசாரிடம் சிக்கியுள்ளார்.
அவரது வீட்டில் கொலைக்கு பயன்படுத்தியது என சந்தேகிக்கப்படும் கத்தி முதலான சில ஆதாரங்கள் கிடைத்துள்ளன.
ஆகவே, அவருக்கும், அவரது வீட்டின் உரிமையாளரான நபர் கொல்லப்பட்டதற்கும் தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகத்தின்பேரில் பொலிசார் அந்தப் பெண்ணிடம் விசாரணை மேற்கொண்டுவருகிறார்கள்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |