அடுத்த சர்ச்சைக்கு தயாராகும் புலம்பெயர்தல் எதிர்ப்பு சுவிஸ் கட்சி
புலம்பெயர்தலுக்கு எதிராக குரல் கொடுத்துவரும் சுவிஸ் மக்கள் கட்சி என்னும் கட்சி, சுவிட்சர்லாந்தின் மக்கள்தொகையை 10 மில்லியனுக்கு மேல் அதிகரிக்கக்கூடாது என்னும் பிரேரணையை முன்வைத்து தோல்வியடைந்தது நினைவிருக்கலாம்.
இந்நிலையில், சுவிட்சர்லாந்து ஐரோப்பிய ஒன்றியத்துடனான சில ஒப்பந்தங்கள் தொடர்பில் வாக்கெடுப்புக்குத் தயாராகிவருகிறது.
அடுத்த வாக்கெடுப்புக்கு தயார்
சுவிஸ் மக்கள் கட்சி இம்முறை குறிவைத்துள்ளது, ஐரோப்பிய ஒன்றியத்துடனான அந்த ஒப்பந்தங்களைத்தான்.
சுவிட்சர்லாந்தும் ஐரோப்பிய ஒன்றியமும், Bilaterals III என அழைக்கப்படும் சில ஒப்பந்தங்களைச் செய்துகொள்வது தொடர்பில் 2024ஆம் ஆண்டு பேச்சுவார்த்தைகளைத் துவக்கின.

இந்த ஆண்டு, அதாவது, 2026ஆம் ஆண்டு, மார்ச் மாதம் அந்த ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
ஐரோப்பிய ஒன்றியத்தின் ஒற்றைச் சந்தை முறை, மின்சாரம், உணவுப்பாதுகாப்பு, விண்வெளி ஆராய்ச்சி, ஐரோப்பிய ஒன்றியத்துக்கு நிதி வழங்கல், இருதரப்பு பிரச்சினைகளைத் தீர்த்துக்கொள்ள நடுவர் மன்றம் போன்ற பல்வேறு விடயங்கள் அந்த ஒப்பந்தத்தில் இடம்பெற்றுள்ளன.
அந்த ஒப்பந்தங்கள், நாடாளுமன்றத்தின் ஒப்புதலுக்காகவும், மக்கள் வாக்களிப்பதற்காகவும் காத்திருக்கின்றன.

இந்நிலையில், புலம்பெயர்தல் எதிர்ப்புக் கட்சியான சுவிஸ் மக்கள் கட்சி, அந்த ஒப்பந்தங்களுக்கு எதிராக பிரச்சாரத்தைத் துவக்கியுள்ளது.
ஐரோப்பிய ஒன்றியத்துடனான ஒப்பந்தங்கள், குற்றவாளிகள் தடையின்றி சுவிட்சர்லாந்துக்குள் நுழைய வழிவகுக்கும் என்று கூறியுள்ளார் அக்கட்சியின் தலைவரான ரோமன் பர்கி.

சமீப காலமாக பிரான்ஸ் நாட்டு வாகனப் பதிவு எண்களுடன் சுவிட்சர்லாந்துக்கு வந்து ஆயுதம் ஏந்திக் கொள்ளையடித்துவிட்டு சில மணி நேரத்துக்குள் தப்பிச் செல்லும் விடயங்கள் அதிகரித்துள்ளதை அதற்கு ஆதாரமாக முன்வைத்துள்ளார் அவர்.
சுவிஸ் மக்கள் கட்சி குறிவைத்துள்ள, ஐரோப்பிய ஒன்றியத்துடனான ஒப்பந்தங்கள் குறித்த அந்த வாக்கெடுப்பு, அடுத்த ஆண்டு துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |