வரி விதிப்பு தொடர்பில் பேச அமெரிக்கா சென்ற சுவிஸ் ஜனாதிபதிக்கு கிடைத்த ஏமாற்றம்?
வரி விதிப்பு தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்கா சென்ற சுவிஸ் ஜனாதிபதிக்கு ஏமாற்றமே கிடைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
39 சதவிகித வரி விதித்த ட்ரம்ப்
ஏப்ரல் மாதம், அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் பல்வேறு வர்த்தகக் கூட்டாளர் நாடுகள் மீது கூடுதல் வரிகள் விதிக்கப்போவதாக அறிவித்திருந்தார்.
அதைத் தொடர்ந்து, சுவிட்சர்லாந்து உட்பட பல நாடுகளின் பிரதிநிதிகள் வரிகளைக் குறைப்பதற்காக ட்ரம்புடன் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.
சுவிட்சர்லாந்தைப் பொருத்தவரை, மூன்று மாதங்கள் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்ட நிலையில், ட்ரம்ப் சுவிட்சர்லாந்துக்கு 10 சதவிகித வரிகளே விதிப்பார் என பேச்சுவார்த்தை நடத்தியவர்கள் நம்பிக்கொண்டிருந்தார்கள்.
ஆனால், வழக்கம்போல ட்ரம்ப் தன் இஷ்டத்துக்கு சுவிட்சர்லாந்து மீது 39 சதவிகித வரிகள் விதிக்கப்போவதாக அறிவித்தார்.
அமெரிக்கா சென்ற சுவிஸ் ஜனாதிபதி
நியூயார்க் நேரப்படி வியாழக்கிழமை அதிகாலை 12.01 மணிக்கு ட்ரம்பின் வரிவிதிப்புகள் அமுலுக்கு வரும் நிலையில், செவ்வாய்க்கிழமையே அமெரிக்காவுக்குப் புறப்பட்டுவிட்டார் சுவிஸ் ஜனாதிபதியான கரின் கெல்லர் (Karin Keller-Sutter).
அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பை சந்தித்து வரிகளைக் குறைப்பது தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக அவர் சென்ற நிலையில், பேச்சுவார்த்தையில் எந்த முன்னேற்றமும் ஏற்படாமலே அவர் அமெரிக்காவிலிருந்து புறப்பட்டுவிட்டதாக கூறப்படுகிறது.
சொல்லப்போனால், சுவிஸ் ஜனாதிபதியான கெல்லரை ட்ரம்ப் சந்திக்கவேயில்லை என்றும், கெல்லர் அமெரிக்க மாகாணங்கள் செயலரான மார்க்கோ ரூபியோவை மட்டுமே சந்தித்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
விடயம் என்னவென்றால், ரூபியோ இருதரப்பு பேச்சுவார்த்தைகள் நடத்துவதற்கான ஆள் அல்ல! புதன்கிழமை, கெல்லர் தலைமையிலான சுவிஸ் குழுவினர் அமெரிக்க அதிகாரிகள் முன் இருதரப்பு ஒப்பந்தம் ஒன்று தொடர்பில் புதிய திட்டம் ஒன்றை முன்வைத்துள்ளனர்.
ஆனால், அதனால் பயன் ஏதும் ஏற்படவில்லையாம். ஆக, வரிகளைக் குறைப்பது தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்கா சென்ற சுவிஸ் ஜனாதிபதிக்கு ஏமாற்றமே மிஞ்சியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |