தங்கத்துக்கு வரி கிடையாது: ட்ரம்ப் அறிவிப்புக்கு சுவிட்சர்லாந்தின் பதில்
அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் சிலவகை தங்கக்கட்டிகளுக்கு அந்நாடு சுங்க வரி விதிக்க இருப்பதாக வெளியான தகவல் சுவிட்சர்லாந்து உட்பட பல நாடுகளின் ஏற்றுமதியாளர்களை அதிர்ச்சியடையச் செய்தது.
கவலையை ஏற்படுத்திய செய்தி
சமீபத்தில், அமெரிக்கா இறக்குமதி செய்யும் 1 கிலோ மற்றும் 100 அவுன்ஸ் அளவிலான தங்கக் கட்டிகளுக்கு சுங்க வரி விதிக்க இருப்பதாக பிரபல ஊடகங்களில் செய்திகள் வெளியாகி, ஏற்றுமதியாளர்களுக்கு கவலையை ஏற்படுத்தின.
அந்த தகவலைத் தொடர்ந்து தங்கம் விலை அவுன்ஸ் ஒன்றிற்கு 50 டொலர்கள் குறைந்தது.
தங்கத்துக்கு வரி கிடையாது: ட்ரம்ப்
இந்நிலையில், தனது சமூக ஊடகப் பக்கத்தில் ஒரு செய்தியை வெளியிட்டுள்ளார் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்.
’அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ஜே. டிரம்பின் அறிக்கை: தங்கத்திற்கு வரி விதிக்கப்படாது’ என்று கூறுகிறது அந்த செய்தி.
ட்ரம்பின் செய்தி தங்க வர்த்தகத்தின் நிலைத்தன்மையை ஊக்குவிப்பதாக உள்ளது என்று கூறியுள்ள சுவிஸ் அரியவகை உலோகங்கள் தயாரிப்பு கூட்டமைப்பின் தலைவரான கிறிஸ்டாஃப் வைல்ட் (Christoph Wild), என்றாலும், முறைப்படியான ஒரு அறிவிப்பு மட்டுமே தங்கம் மற்றும் அது சார்ந்த தொழில் துறையில் நிலைத்தன்மையை அளிக்கமுடியும் என்றும் கூறியுள்ளார்.
ஏற்கனவே, இறக்குமதி செய்யப்படும் சில வகை தங்கக்கட்டிகள் மீது அமெரிக்க சுங்க வரி விதிக்க இருப்பதாக வெளியான தவறான தகவலுக்கு விளக்கமளிக்கும் வகையில், வெள்ளை மாளிகை நிர்வாக ஆணை ஒன்றை வெளியிட இருப்பதாக செய்திகள் வெளியாகிவருகின்றன.
அந்த அதிகாரப்பூர்வ தகவலுக்காக காத்திருக்கும் சுவிஸ் அரியவகை உலோகங்கள் தயாரிப்பு கூட்டமைப்பு, அப்போதுதான் சுவிட்சர்லாந்து மற்றும் அமெரிக்காவுக்கிடையிலான தங்கத் துறை உறவு அனைத்து தரப்பினருக்கும் பாதுகாப்பானதாக மீண்டும் தொடர இயலும் என்கிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |