கிராமப்புறங்களில் வீடு தேடி படையெடுக்கும் சுவிஸ் மக்கள்: காரணம் இது தான்
சுவிட்சர்லாந்தில் தற்போது கிராமப்புற சூழலில் உள்ள வீடுகளுக்கு குறிப்பாக தேவை அதிகரித்துள்ளதாக ஆய்வுகளில் தெரிய வந்துள்ளது.
கொரோனா பெருந்தொற்றால் பொதுவாக மக்களின் இயல்பு வாழ்க்கை மொத்தமாக பாதிப்படைந்துள்ளது. 2020 தொடக்கத்தில் இருந்தே பெரும்பாலான மக்கள் தங்களின் குடியிருப்புகளில் முடங்கியுள்ளதுடன், வீட்டில் இருந்தே பணியாற்றியும் வருகின்றனர்.
இந்த நிலையில், குடியிருப்புகளின் முக்கியத்துவத்தை மக்கள் உணரத்தொடங்கியுள்ளதாக ஆய்வுகளில் தெரிய வந்துள்ளது.
இதேவேளை, சுவிட்சர்லாந்தின் சரிபாதிக்கும் அதிகமான குடிமக்கள் தனி வீடுகள் மீது தற்போது நாட்டம் கொண்டுள்ளனர்.
மட்டுமின்றி, கிராமப்புற சூழலில் உள்ள வீடுகளுக்கு குறிப்பாக தேவை அதிகரித்துள்ளதாக குடியிருப்புகள் தொடர்பில் ஆய்வு மேற்கொள்ளும் பிரபல நிறுவனங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.
கொரோனா பரவல் தொடங்கிய காலம் முதலே, இரண்டில் ஒருவர் கிராமப்புறங்களில் குடியிருப்பதையும், வீடு வாங்க விரும்புவதை வெளிப்படுத்தியுள்ளனர்.
பெருந்தொற்று காரணமாக காற்றோட்டமான, அதிக இடவசதி கொண்ட வீடுகளுக்கு சுவிஸ் மக்கள் அதிக முன்னுரிமை அளிப்பதாக தெரிய வந்துள்ளது.
பெரும்பாலான மக்களில் பால்கனி, மொட்டை மாடி அல்லது தோட்டத்திற்கான விருப்பமும் அதிகரித்துள்ளது.
பெரும்பாலான மக்கள் வீட்டில் இருந்தே பணியாற்றும் சூழல் இருப்பதால், வீட்டில் தோட்டம் அல்லது மொட்டைமாடி இருப்பதை தேவை என கருதுகின்றனர்.
மேலும், மூன்றில் ஒருவர், தங்களின் குடியிருப்பில் அலுவலகத்திற்கு என ஒரு அறை இருக்க வேண்டும் என விரும்புகின்ரனர்.
இருப்பினும், பொருளாதார நெருக்கடி காரணமாக, தங்களுக்கான கனவு இல்லத்தை சொந்தமாக்க, பெரும்பாலான சுவிஸ் மக்கள் இன்னும் ஓராண்டு தேவைப்படும் என குறிப்பிட்டுள்ளனர்.