பயணக்கட்டுப்பாடுகளை நெகிழ்த்த சுவிட்சர்லாந்து முடிவு: எப்போது தெரியுமா?
வரும் சனிக்கிழமை முதல், பயணக்கட்டுப்பாடுகளை நெகிழ்த்த சுவிட்சர்லாந்து முடிவு செய்துள்ளது.
சுவிட்சர்லாந்துக்குள் நுழைவதற்கான கொரோனா பரிசோதனை முதலான கட்டுப்பாடுகள், வரும் சனிக்கிழமை முதல் நெகிழ்த்தப்பட உள்ளன.
நேற்று, ஜனவரி 19ஆம் திகதி, சுவிஸ் அரசு கொரோனா கட்டுப்பாடுகள் தொடர்பில் பல அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது.
அதன்படி, தற்போது நடைமுறையிலிருக்கும் பல கட்டுப்பாடுகள் நீட்டிக்கப்பட இருக்கும் அதே நேரத்தில், கொரோனா பரிசோதனை மற்றும் தனிமைப்படுத்தல் விதிகளில் சில மாற்றங்கள் செய்யப்பட உள்ளன.
மேலும் சில கட்டுப்பாடுகளை நெகிழ்த்துவது தொடர்பாக, அரசு பிப்ரவரி 2ஆம் திகதி ஆலோசிக்க உள்ளது.
கொரோனா பரிசோதனை
ஜனவரி 22ஆம் திகதி முதல், சுவிட்சர்லாந்துக்குள் நுழைவோர், தடுப்பூசி பெற்றிருந்தால் அல்லது கொரோனாவிலிருந்து விடுபட்டிருந்தால், கொரோனா பரிசோதனையில் தங்களுக்கு கொரோனா இல்லை என்பதற்கான ஆதாரத்தைக் காட்டவேண்டிய அவசியம் இல்லை.
ஆனால், தடுப்பூசி பெறாதவர்களும், கொரோனா தொற்று உருவாகி, அதிலிருந்து விடுபடாதவர்களும், கொரோனா பரிசோதனையில் தங்களுக்கு கொரோனா இல்லை என்பதற்கான ஆதாரத்தைக் காட்டித்தான் ஆகவேண்டும்.
அதாவது, சுருக்கமாகக் கூறினால், சுவிட்சர்லாந்துக்குள் நுழையும் அனைவருக்கும் 3G விதிகள் பொருந்தும் எனலாம்.
மேலும், நுழைவுப் படிவ விதிகளும் நெகிழ்த்தப்பட்டுள்ளன. விமானங்கள் மற்றும் நீண்ட தூர பேருந்துகளில் சுவிட்சர்லாந்துக்கு வருவோர் மட்டுமே நுழைவு படிவத்தை பூர்த்தி செய்யவேண்டியிருக்கும்.
பிசிஆர் பரிசோதனையில் முன்னுரிமை
பிசிஆர் பரிசோதனை கிட்களில் ஏற்பட்டுள்ள தட்டுப்பாடு காரணமாக, யார் யாருக்கு பிசிஆர் பரிசோதனையில் முன்னுரிமை என்னும் விடயத்திலும் ஒரு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
அதன்படி,
- கோவிட் அறிகுறிகளுடன் காணப்படும் அதிக அபாயத்திலிருப்போர் அல்லது கொரோனா தொற்றுடையவருடன் தொடர்பிலிருந்தவர்கள்
- மருத்துவமனைகள், காப்பகங்கள் போன்ற இடங்களில் ஒரே நேரத்தில் பலருக்கு மொத்தமாக கோவிட் பரிசோதனை செய்யும்போது
- மிக மோசமான கோவிட் பாதிப்பு உள்ள இடங்களில் ஒரே நேரத்தில் பலருக்கு மொத்தமாக கோவிட் பரிசோதனை செய்யும்போது
- அறிகுறிகள் காணப்படுவோருக்கு
- பள்ளிகளில் ஒரே நேரத்தில் பலருக்கு மொத்தமாக கோவிட் பரிசோதனை செய்யும்போது
- அலுவலகங்களில் ஒரே நேரத்தில் பலருக்கு மொத்தமாக கோவிட் பரிசோதனை செய்யும்போது
- தனிப்பட்ட விதத்தில் அல்லது அலுவல் காரணமாக பயணிக்கும்போது
- கொரோனா சான்றிதழ் பெறுவதற்காக கொரோனா பரிசோதனை கோரும்போது
இது போன்றவர்களுக்கு மட்டுமே, இதே வரிசையில், பிசிஆர் முறை கொரோனா பரிசோதனை செய்ய முன்னுரிமை அளிக்கப்படும்.
மேலும், பிசிஆர் கிட் தட்டுப்பாட்டை மேலும் அதிகரிப்பதைத் தவிர்க்கும் நோக்கில், ஜனவரி 24 முதல், கொரோனானாவிலிருந்து விடுபட்டதை நிரூபிப்பதற்கான சான்றிதழ் கோருவோருக்கு, விரைவாக பரிசோதனை முடிவுகளைக் கொடுக்கும் rapid antigen test முறையைப் பயன்படுத்தி கொரோனா பரிசோதனை செய்ய தற்காலிகமாக திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த சான்றிதழ், 270 நாட்களுக்கு, சுவிட்சர்லாந்தில் மட்டுமே செல்லுபடியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.