சுவிஸ் கட்டாய தனிமைப்படுத்தல் பட்டியலில் மேலும் 4 நாடுகள் சேர்ப்பு
சுவிட்சர்லாந்தின் கட்டாய தனிமைப்படுத்தல் பட்டியலில் இன்று புதிதாக கனடா உட்பட மேலும் 4 நாடுகள் சேர்க்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தெற்கு ஆப்பிரிக்க நாடான போட்ஸாவானவில் முதன்முதலில் கண்டறியப்பட்ட Omicron எனும் புதிய வகை கொரோனா வைரஸின் அச்சுறுத்தல் காரணமாக, சுவிட்சர்லாந்து அரசு, அதன் தனிமைப்படுத்தல் நாடுகள் பட்டியலில் () பல உலக நாடுகளை இணைத்துவருகிறது.
தெற்கு ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து பயணித்த பயணிகள் மூலமாக சில நாடுகளில் இந்த Omicron வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் கண்டறியப்பட்டுள்ளனர்.
அந்த நாடுகளில் இருந்தும் சுவிட்சர்லாந்துக்கு பரவிவிடாமாக் இருக்க அரசு இதுபோன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. அந்த வகையில், வெள்ளிக்கிழமையில் இருந்து தினமும் பல நாடுகளை இணைத்து, சுவிஸ் அதன் தனிமைப்படுத்தல் பட்டியலை விரிவுபடுத்திவருகிறது.
முன்னதாக, வெள்ளிக்கிழமையன்று பெல்ஜியம், போட்ஸ்வானா, ஈஸ்வதினி, ஹாங்காங், இஸ்ரேல், லெசோதோ, மொசாம்பிக், நமீபியா, தென்னாப்பிரிக்கா மற்றும் ஜிம்பாப்வே உள்ளிட்ட பல நாடுகள் பட்டியலில் சேர்க்கப்பட்டன.
அதனைத் தொடர்ந்து, செக் குடியரசு, எகிப்து, மலாவி, நெதர்லாந்து மற்றும் பிரித்தானியா ஆகியவை சனிக்கிழமை சேர்க்கப்பட்டன.
அதேபோல், (நேற்று) திங்களன்று அங்கோலா, அவுஸ்திரேலியா, டென்மார்க் மற்றும் ஜாம்பியா உட்பட மேலும் நான்கு நாடுகள் சேர்க்கப்பட்டது.
இந்நிலையில், இன்று சுவிட்சர்லாந்து அரசு வெளியிட்டுள்ள அதிகாரப்பூரவ அறிவிப்பின்படி, கனடா, போர்ச்சுகல், நைஜீரியா மற்றும் ஜப்பான் உட்பட பல நாடுகளை கட்டாய தனிமைப்படுத்தல் பட்டியலில் சேர்த்துள்ளது.
கட்டாய தனிமைப்படுத்தல் பட்டியலின் விதிமுறைகள் என்ன?
இந்த நாடுகளில் இருந்து வருபவர்கள் வந்தவுடன் நெகட்டிவ் சோதனை முடிவை முன்வைக்க வேண்டும் மற்றும் 10 நாட்களுக்கு தனிமைப்படுத்தப்பட வேண்டும். மக்கள் தடுப்பூசி போடப்பட்டாலும் அல்லது வைரஸிலிருந்து மீண்டிருந்தாலும் இதுதான் நிலை.
இந்த விதி சுவிஸ் குடிமக்கள் மற்றும் குடியிருப்பாளர்கள் மற்றும் பார்வையாளர்களுக்கும் பொருந்தும்.
கன்டோனல் அதிகாரிகளுக்குத் தெரிவிப்பதோடு, 4-வது நாளிலும் 7-ஆம் நாளிலும் சோதனையைச் செய்ய வேண்டும்.
மேலும், நாட்டுக்கு வருபவர்கள் நுழைவு படிவத்தையும் நிரப்ப வேண்டும்.