சுவிட்சர்லாந்தில் மக்கள் தொகை உச்சவரம்பு நிர்ணயம்: மக்கள் சொன்ன தெளிவான தீர்ப்பு
மக்கள் தொகை உச்ச வரம்பை நிர்ணயிப்பது தொடர்பான முக்கிய முடிவை சுவிட்சர்லாந்து மக்கள் வெளிப்படுத்தியுள்ளனர்.
மக்கள் தொகை உச்சவரம்பு நிராகரிப்பு
சுவிட்சர்லாந்தின் ஒட்டுமொத்த மக்கள் தொகையை ஒரு கோடியாக(10 மில்லியன்) கட்டுப்படுத்த வேண்டும் என்ற தீர்மானத்தை அந்நாட்டு மக்கள் முற்றிலுமாக நிராகரித்துள்ளனர்.
இது தொடர்பாக நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் கிட்டத்தட்ட 60% மக்கள் பங்கேற்று வாக்களித்தனர். இதில் 55% மக்கள் மக்கள் தொகை உச்ச வரம்பை நிர்ணயத்திற்கு முழுமையான எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். வெறும் 45% மக்கள் மட்டுமே இதற்கு ஆதரவு தெரிவித்து வாக்களித்துள்ளனர்.

சுவிட்சர்லாந்தில் குடிபெயர்வோருக்கு எதிராக கொள்கை கொண்ட கட்சியாக கருதப்படும் வலதுசாரி அரசியல் கட்சியான சுவிஸ் மக்கள் கட்சி(SVP) இந்த முயற்சியை முன்னெடுத்தது.
நாட்டின் வீட்டு வசதி, பொது போக்குவரத்து, சுற்றுச்சூழல் மீதான அழுத்தத்தை குறைக்கவே மக்கள் தொகை கட்டுப்பாடு என்ற இந்த முன்முயற்சி மேற்கொள்ளப்பட்டதாக அக்கட்சி விளக்கியுள்ளது.
ஆனால், உருவாகும் சமூக பிரச்சனைகளுக்கு சிறுபான்மை மக்களையும், தஞ்சம் கோருபவர்களையும் பலிகடா ஆக்கும் நடவடிக்கையாகவே மாறும் என்று எதிர்தரப்பினர் விமர்சனம் செய்துள்ளனர்.
இந்த திட்டத்திற்கு சுவிஸ் அரசாங்கம் மற்றும் நாட்டின் பிற முக்கிய கட்சிகள் கடுமையான எதிர்ப்பை தெரிவித்துள்ளனர்.
பொருளாதார கவலைகள்
ஒருவேளை இந்த மக்கள் தொகை உச்சவரம்பு நிர்ணயம் செயல்பாட்டிற்கு வந்தால், சுவிட்சர்லாந்து ஐரோப்பிய ஒன்றியத்துடன் மேற்கொண்டுள்ள சுதந்திர நடமாட்டம் என்ற ஒப்பந்தம் ஆபத்துக்குள்ளாகும் என்ற அச்சம் எழுந்துள்ளது.

சுவிட்சர்லாந்தின் பெரும்பாலான ஏற்றுமதி பொருட்கள் ஐரோப்பிய ஒன்றியத்தையே நம்பி உள்ளது. எனவே இந்த நடவடிக்கையின் மூலம் ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டால் சுவிட்சர்லாந்தின் பொருளாதார சந்தைக்கான வாய்ப்பு பறிபோயிருக்கும்.
அத்துடன் சுற்றுலா, சுகாதாரம் போன்ற துறைகளில் வெளி நாட்டவர்களின் பங்களிப்பு இல்லாமல் போயிருக்கும். மேலும் மக்கள் தொகை கட்டுப்பாட்டினால் எதிர்காலத்தில் நாட்டின் மனித வள பற்றாக்குறை ஏற்படும் என்று மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
2002ம் ஆண்டு சுவிட்சர்லாந்தின் மக்கள் தொகை 7.3 மில்லியனாக இருந்தது. தற்போது 9.1 மில்லியனாக அதிகரித்துள்ளது. இதில் 27% சுவிஸ் குடிமக்கள் அல்லாதவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |