திங்கட்கிழமை முதல் சுவிட்சர்லாந்தில் நெகிழ்த்தப்படவிருக்கும் கட்டுப்பாடுகள்
திங்கட்கிழமை முதல் சுவிட்சர்லாந்தில் பல கட்டுப்பாடுகள் நெகிழ்த்தப்பட உள்ளதாக பெடரல் கவுன்சில் தெரிவித்துள்ளது. அதன்படி, திங்கட்கிழமை முதல் உணவகங்களின் மாடிகளில் அமர்ந்து உணவருந்த அனுமதியளிக்கப்பட உள்ளது.
ஆனால், ஒரு மேஜையைச் சுற்றி 4 பேர் மட்டுமே அமரலாம். பல்கலைக்கழக மாணவர்கள் வகுப்புகளுக்கு திரும்பலாம். ஆனால், அறையின் மூன்றில் ஒரு பங்கில் மட்டுமே மாணவர்கள் அமரலாம், அதிகபட்சமாக 50 பேருக்கு அனுமதி. என்றாலும் மாஸ்க் மற்றும் சமூக இடைவெளியை கட்டாயம் பின்பற்றவேண்டும்.
திரையரங்குகள் இயங்கலாம், ஆனால் வழக்கமாக எவ்வளவு பேர் வருவார்களோ, அவர்களில் மூன்றில் ஒரு பங்கு மக்களுக்குத்தான் அனுமதி. உதாரணமாக 100 பேர் அமரும் வசதி கொண்ட ஒரு அரங்கில் 33 பேருக்கு மட்டுமே அனுமதி.
திறந்த வெளி விளையாட்டு அரங்கங்களில் 100 பேருக்கும், மூடிய அரங்கங்களில் 50 பேருக்கும் மட்டுமே அனுமதி. உணவோ பானங்களோ விநியோகிக்கப்படாது. அருங்காட்சியகங்களுக்கு சிறு குழுக்களாக மக்கள் வர அனுமதி.
இரவு விடுதிகள் முதலானவற்றை திறக்க அனுமதி இல்லை. உயிரியல் பூங்காக்கள், மற்றும் தாவரவியல் பூங்காக்கள் தங்கள் உள் அரங்குகளை திறக்க அனுமதி, ஆனால், மாஸ்க் கட்டாயம்.
நீச்சல் குளங்களுக்குச் செல்ல அனுமதியில்லை. 8.6 மில்லியன் மக்களைக் கொண்ட சுவிட்சர்லாந்தில், இதுவரை 625,000 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார்கள், 9,790 பேர் உயிரிழந்துள்ளார்கள்.
இப்படிப்பட்ட ஒரு சூழலில் சுவிட்சர்லாந்து கட்டுப்பாடுகளை நெகிழ்த்தியுள்ள
நிலையில், சுவிஸ் சுகாதாரத்துறை அமைச்சரான Alain Berset, திங்கட்கிழமை முதல்
கட்டுப்பாடுகள் நெகிழ்த்தப்பட்டாலும், மாஸ்க் அணிதல் மற்றும் சமூக இடைவெளியைப்
பின்பற்றுதல் முதலான கட்டுப்பாடுகளை மக்கள் கட்டாயம் பின்பற்றவேண்டும் என
வலியுறுத்தியுள்ளார்.