வெளிநாட்டவர்கள் வாழ சிறந்த நாடுகள் பட்டியலில் தொடர்ந்து மூன்று ஆண்டுகளாக முதலிடம் வகிக்கும் நாடு
வெளிநாட்டவர்கள் வாழ்வதற்கு உகந்த சிறந்த நாடுகள் பட்டியலில், தொடர்ந்து மூன்றாவது முறையாக சுவிட்சர்லாந்து முதலிடம் பிடித்துள்ளது.
பிரித்தானிய வங்கியான HSBCயின் வருடாந்திர சுவிஸ் வாழ் வெளிநாட்டவர்கள் தொடர்பான ஆய்வில், கொரோனா கட்டுப்பாடுகளின் மத்தியிலும் தன் வாழ்க்கைத்தரம் முதலான காரணங்களால் இந்த கௌரவத்தைப் பெற்றுள்ளது சுவிட்சர்லாந்து.
செவ்வாய்க்கிழமை வெளியான இந்த தரவரிசைப்பட்டியலில் முதலிடத்தை சுவிட்சர்லாந்தும், இரண்டாவது இடத்தை அவுஸ்திரேலியாவும், மூன்றாவது இடத்தை நியூசிலாந்திலும் பிடித்துள்ளன.
ஆய்வில் பங்கேற்ற வெளிநாட்டவர்களில் பத்தில் ஒன்பது பேர் வரை, குறைந்தது இன்னும் ஒரு வருடமாவது தாங்கள் சுவிட்சர்லாந்தில் இருப்போம் என்று கூறியுள்ளார்கள். அதற்கு நிலைத்தன்மை ஒரு குறிப்பிட்ட காரணியாக தோன்றும் நிலையில், சுவிட்சர்லாந்தில் வாழும் சுமார் 92 சதவிகிதம் வெளிநாட்டவர்கள், அடுத்த 12 மாதங்களுக்கு வாழ்வதற்கு நிலையான ஒரு நாடு சுவிட்சர்லாந்து என்று கூறியுள்ளார்கள்.
ஆய்வில் பங்கேற்ற 90 சதவிகித வெளிநாட்டவர்கள், சுவிட்சர்லாந்துக்கு வந்த பிறகு, சுவிஸ் சுற்றுச்சூழல் சிறந்ததாக இருப்பதாக உணர்ந்ததாகவும், 85 சதவிகிதத்தினர் பாதுகாப்பாக உணர்ந்ததாகவும் தெரிவித்துள்ளனர். கிட்டத்தட்ட முக்கால் வாசிப்பேர் பணி ஓய்வுக்குப் பிந்தைய வாழ்வுக்காக பணம் சேகரிக்க விரும்புவதாகவும், கால்வாசிப்பேர் சுவிட்சர்லாந்தில் சொத்து வாங்குவதற்காக பணம் ஒதுக்கிவைப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.
இந்த ஆய்வு, கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக வெளிநாட்டவர்கள் நாடு திரும்ப இயலாத ஒரு நிலை ஏற்பட்டதற்குப் பின் மேற்கொள்ளப்பட்டது என்பது கவனத்தில் கொள்ளவேண்டிய ஒரு விடயமாகும்.
இதற்கிடையில், வெளிநாட்டவர்கள் தொடர்பான ஆய்வுகளில் சுவிட்சர்லாந்து குறித்து மாறுபட்ட கருத்துகள் நிலவுவதையும் குறிப்பிட்டுத்தான் ஆகவேண்டும். காரணம், இதே ஆண்டின் துவக்கத்தில் மேற்கொள்ளப்பட்ட வேறு ஒரு ஆய்வில், வெளிநாட்டவர்கள் வாழ உகந்த நாடுகள் பட்டியலில், 59 நாடுகளில் சுவிட்சர்லாந்து 30ஆவது இடத்தில் உள்ளது.
வாழ்க்கைத் தரத்தில் சிறந்து விளங்கும் சுவிட்சர்லாந்து, குடியமர்தல், புதிய நண்பர்களை உருவாக்குதல் மற்றும் விலைவாசி ஆகிய விடயங்களில் அவ்வளவு சிறந்ததாக இல்லை என்பதுதான் அந்த ஆய்வின் முடிவுக்கு காரணமாக அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.