கிளர்ச்சியாளர்களை குறிவைத்த ரஷ்ய - சிரியா போர் விமானங்கள்... உறுதி செய்த ராணுவம்
வடமேற்கு சிரியாவில் கிளர்ச்சியாளர்களின் தாக்குதலில் டசின் கணக்கான துருப்புக்கள் கொல்லப்பட்டதாக சிரியா இராணுவம் தெரிவித்துள்ளது.
இராணுவம் பகிரங்கமாக
கிளர்ச்சியாளர்கள் அலெப்போ நகரின் பெரும் பகுதியை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளதாகவும், இராணுவத்தை மீண்டும் நிலைநிறுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.
மட்டுமின்றி, ஹயாத் தஹ்ரிர் அல்-ஷாம் தலைமையிலான கிளர்ச்சியாளர்கள் அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் உள்ள அலெப்போ நகருக்குள் நுழைந்ததை இராணுவம் பகிரங்கமாக ஒப்புக்கொண்டுள்ளது.
அத்துடன் பதில் தாக்குதலுக்கு இராணுவம் தயாராகி வருவதாகவும் குறிப்பிட்டுள்ளதுடன், பொது மக்கள் மற்றும் இராணுவத்தினர் பலர் கொல்லப்பட்டுள்ளதாகவும் உறுதி செய்துள்ளனர்.
கிளர்ச்சியாளர்கள் முன்னெடுத்த இந்த திடீர் தாக்குதலானது ஜனாதிபதி பஷர் அல்-அசாத்திற்கு பல ஆண்டுகளுக்கு பின்னர் மிக முக்கியமான சவாலை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 2020 முதல் பெரும்பாலும் உறைந்து கிடக்கும் சிரியா உள்நாட்டுப் போரின் வேர்களை உலுக்கியுள்ளதாகவே கூறப்படுகிறது.
குறிவைத்ததாக தகவல்
இதனிடையே, அலெப்போ நகரத்தில் கிளர்ச்சியாளர்களால் தங்கள் நிலைகளை நிறுவ முடியவில்லை என்றும் அவர்களின் நிலைகள் மீது இராணுவம் தொடர்ந்து குண்டுவீச்சு நடத்தியுள்ளது எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
முன்னதாக சனிக்கிழமையன்று அலெப்போ புறநகர் பகுதியில் ரஷ்ய மற்றும் சிரிய போர் விமானங்கள் கிளர்ச்சியாளர்களை குறிவைத்ததாக தகவல் கசிந்துள்ளது.
2011ல் தொடங்கிய சிரிய உள்நாட்டுப் போரில் அசாத் அரசாங்கத்துக்கு உதவ ரஷ்யா தனது விமானப் படையை 2015ல் சிரியாவுக்கு அனுப்பியது. அத்துடன் வார்னர் படையும் சிரியாவில் களமிறங்கி, கொடூர நடவடிக்கைகளை முன்னெடுத்தது.
இந்த நிலையில், கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் என்பது சிரியாவின் இறையாண்மையை மீறிய செயல் என ரஷ்யா கருதுவதாக ஜனாதிபதி மாளிகை செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் தெரிவித்துள்ளார். மட்டுமின்றி, சிரியா அரசாங்கத்டிற்கு ஆதரவாக இருப்போம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |