அந்த நாட்டு அகதிகள் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்படுவார்கள்... ஜேர்மன் சேன்சலர் திட்டவட்டம்
ஜேர்மனியில் உள்ள சிரிய அகதிகள் தங்கள் நாட்டின் போர் முடிந்துவிட்டதால் தற்போது நாடு திரும்ப வேண்டும் அல்லது நாடுகடத்தப்படுவதை எதிர்கொள்ள வேண்டும் என சேன்சலர் பிரெட்ரிக் மெர்ஸ் தெரிவித்துள்ளார்.
வலுக்கட்டாயமாக
சிரிய அகதிகள் நாடு திரும்ப மறுத்தால், கண்டிப்பாக அவர்கள் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்படுவார்கள் என்றும் மெர்ஸ் தெரிவித்துள்ளார். வடக்கு ஜெர்மனியில் உள்ள ஹுசுமுக்கு விஜயம் செய்தபோது அவர் இதை தெரிவித்துள்ளார்.

ஆனால், ஜேர்மனியின் வெளிவிவகார அமைச்சர் Johann Wadephul தெரிவிக்கையில், 13 வருடங்கள் நீடித்த மிக மோசமான போரில் நாட்டின் உள்கட்டமைப்பின் பெரும்பகுதி அழிந்துள்ளது.
இந்த நெருக்கடியான சூழலில் சிரியா மக்கள் மொத்தமாக நாடு திரும்புவது என்பது மேலும் சிக்கலை ஏற்படுத்தும் என்றார். வியாழக்கிழமை அமைச்சர் தெரிவித்த இந்த கருத்து, சேன்சலர் மெர்ஸிடம் இருந்து கடும் பின்னடைவை ஏற்படுத்தியது.
விவாதிக்கப்படும்
மேலும் சிரியாவின் ஜனாதிபதி அகமது அல்-ஷாராவை தாம் ஜேர்மனிக்கு அழைத்துள்ளதாகவும், அகதிகள் விவகாரத்தை எவ்வாறு முடிவுக்கு கொண்டுவருவது என்பதில் இரு தரப்பும் இணைந்து செயல்படுவது குறித்து விவாதிக்கப்படும் என்றும் மெர்ஸ் குறிப்பிட்டுள்ளார்.

ஜேர்மனியில் தற்போது சுமார் ஒரு மில்லியன் சிரியர்கள் வசிக்கின்றனர், அவர்களில் பெரும்பாலோர் 2015 மற்றும் 2016 ஆம் ஆண்டுகளில் போரிலிருந்து பெருமளவில் வெளியேறியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |