சிரியாவில் மீண்டும் பதற்றம்... இரண்டே நாட்களில் சுட்டுக்கொல்லப்பட்ட 300க்கும் மேற்பட்ட பொதுமக்கள்
சிரிய பாதுகாப்புப் படையினரும் அதனுடன் இணைந்த துப்பாக்கிதாரிகளும் கடந்த இரண்டு நாட்களில் 340க்கும் மேற்பட்ட பொதுமக்களைக் கொன்றுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
அரசாங்க நடவடிக்கை
கொல்லப்பட்டவர்களில் பெரும்பாலோர் அலவைட் சிறுபான்மையினரைச் சேர்ந்தவர்கள் என்றே தெரிய வந்துள்ளது. வியாழக்கிழமை சிரிய அரசு ஊடகம் உள்விவகார அமைச்சக வட்டாரத்தை மேற்கோள் காட்டி வெளியிட்டுள்ள தகவலில்,
பதவி நீக்கம் செய்யப்பட்ட அசாத் ஆட்சியுடன் தொடர்புடைய போராளிகளை ஒடுக்குவதற்கான அரசாங்க நடவடிக்கையின் போது தனிப்பட்ட மீறல்கள் நிகழ்ந்தன என குறிப்பிட்டுள்ளனர்.
மேலும், இந்த விவகாரம் தொடர்பில் நடவடிக்கை முன்னெடுக்கவும் தயாராகி வருவதாக தெரிவித்துள்ளனர். முதல் நாளில் 162 பேர்கள் கொல்லப்பட்டதாகவும் அதில் 13 பெண்கள் மற்றும் 5 சிறார்கள் எனவும் தகவல் வெளியானது.
ஊரடங்கு உத்தரவு
டிசம்பரில் அசாதை பதவி நீக்கம் செய்த சிரியாவின் புதிய ஆட்சியாளர்கள், முன்னாள் ஜனாதிபதியின் சொந்த ஊரான கர்தாஹாவில் தற்போது இராணுவ நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளதாகக் கூறினர்.
இதனிடையே கலவரம் வெடித்த ஹோம்ஸ், லடாகியா மற்றும் டார்டஸ் நகரங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. லடாகியா பகுதியில் வாகனம் ஒன்றில் சடலம் ஒன்றை கட்டி இழுத்துச் செல்லும் காணொளி ஒன்று சமூக ஊடகத்தில் வெளியானது தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |