பொதுமக்களில் 288 பேர் கொத்தாகப் படுகொலை... தலைமறைவாகியிருந்த முக்கிய அதிகாரி கைது
சிரியாவில் 288 பொதுமக்கள் கொத்தாகப் படுகொலை செய்யப்பட்ட நடுங்கவைக்கும் சம்பவத்தில் தொடர்புடைய முதன்மை குற்றவாளி கைதாகியுள்ளார்.
12 குழந்தைகள் உட்பட
சிரியாவில் பஷார் அல்-அசாத்தின் வீழ்ச்சிக்குப் பிறகு நாட்டின் மிகவும் தேடப்படும் தலைமறைவான குற்றவாளிகளில் ஒருவராக அறிவிக்கப்பட்ட நபரே தற்போது பாதுகாப்புப் படைகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஹமா நகரத்திற்கு வெளியே சுமார் 30 மைல் தொலைவில் உள்ள காப் சமவெளிப் பகுதியில் அம்ஜத் யூசுப் சிறைபிடிக்கப்பட்டுள்ளார். தற்போது 40 வயதாகும் அம்ஜத் யூசுப் முன்னாள் இராணுவ உளவுத்துறை அதிகாரியாவார்.
வெளியான தகவலில், கிராமப்புறம் ஒன்றில் உள்ள வெளிர் பழுப்பு நிற கான்கிரீட் வீட்டிற்குள் பாதுகாப்புப் படையினர் புகுந்து, சிவப்பு நிற ஹூடி அணிந்திருந்த யூசுப், எந்த உணர்ச்சியுமின்றி சுற்றி வளைக்கப்பட்டு பாதுகாப்பு வாகனத்திற்கு இழுத்துச் செல்லப்பட்டார்.
2024 ஆம் ஆண்டின் இறுதியில் அசாத் பதவியிலிருந்து கவிழ்க்கப்பட்டதிலிருந்து யூசுப் காப் சமவெளிப் பகுதியில் தலைமறைவாக இருந்து வந்துள்ளார்.
Tadamon படுகொலை என்று அறியப்படும் சம்பவத்தில், அவர் மிக முக்கியமான குற்றவாளிகளில் ஒருவராக அறியப்பட்டார். 2013-ஆம் ஆண்டில் டமாஸ்கஸின் தெற்குப் பகுதி ஒன்றில், 12 குழந்தைகள் உட்பட சுமார் 288 பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்ட கொடூர சம்பவத்தையே Tadamon படுகொலை என அடையாளப்படுத்துகின்றனர்.

இது, கொலையாளிகளே தாங்களாகவே பதிவு செய்த தொடர் காணொளிகளில் ஆவணப்படுத்தப்பட்டு, ஐரோப்பாவில் உள்ள ஆய்வாளர்களுக்குக் கசியவிடப்பட்டது.
மகிழ்ச்சியுடன் வரவேற்கப்பட்டது
சீருடை அணிந்த சிரியப் பாதுகாப்பு அதிகாரிகளும், அரசு ஆதரவுப் போராளிகளும், கண்களைக் கட்டப்பட்ட பொதுமக்களின் குழுக்களை ஒரு குழியின் விளிம்பிற்கு அழைத்துச் சென்று, அவர்களை உள்ளே தள்ளி, பின்னர் சுட்டுக் கொல்வதை 24-க்கும் மேற்பட்ட காணொளிகளில் பதிவு செய்யப்பட்டிருந்தது.
அவர்களின் உடல்கள் எரிக்கப்பட்டு, ஒரு புல்டோசரின் உதவியுடன் புதைக்கப்பட்டன; இவை அனைத்தும் குற்றவாளிகளால் மிக விரிவாகப் பதிவு செய்யப்பட்டன. சிரியா முழுவதும் உள்ள சர்ச்சைக்குரிய பகுதிகளில், அசாத் அரசாங்கப் படைகள் பொதுமக்களைக் கொடூரமாக நடத்திய விதத்தை இந்தக் காணொளிப் பதிவு வெளிச்சம் போட்டுக் காட்டியது.

இந்த நிலையில், இந்தக் கொடூர சம்பவத்தின் பின்னணியில் செயல்பட்டது இராணுவ உளவுத்துறை அதிகாரி அம்ஜத் யூசுப் என்பது நிரூபணமானதை அடுத்து, அமெரிக்க வெளிவிவகார அமைச்சும் ஐரோப்பிய ஒன்றியமும் யூசுபுக்கு எதிராகத் தடைகளை அறிவித்தன; பிரான்ஸ் போர்க்குற்ற விசாரணை ஒன்றைத் தொடங்குவதாகத் தெரிவித்தது.
யூசுஃப் கைது செய்யப்பட்ட செய்தி தடாமோனில் மகிழ்ச்சியுடன் வரவேற்கப்பட்டது; வெள்ளிக்கிழமைத் தொழுகைக்குப் பிறகு அங்குப் பெருமளவிலான கொண்டாட்டங்கள் நடைபெற்றன.
தடாமோன் பகுதியில் நிகழ்ந்த அட்டூழியங்கள் குறைந்தது 2015 வரையிலாவது தொடர்ந்ததாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்; இதில் மரணமடைந்தவர்களின் உண்மையான எண்ணிக்கை 1,000-ஐத் தாண்டியிருக்கக்கூடும் என்றும், அவர்களில் பலர் அப்பகுதியைச் சுற்றியுள்ள கூட்டுப் கல்லறைகளில் நல்லடக்கம் செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |